கூடைப்பந்து விளையாடி கொண்டிருந்த 20 வயது மாணவர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் சக மாணவர்கள்..!
Webdunia Tamil April 06, 2026 05:48 PM

புனேவில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் கூடைப்பந்து விளையாடி கொண்டிருந்த 20 வயது மாணவர், இரும்பு தூண் சரிந்து விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிஷால் வர்மா என்ற அந்த மாணவர், ஞாயிற்றுக்கிழமை காலை 7:20 மணியளவில் கல்லூரி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கூடைப்பந்து வளையத்தை பிடித்து தொங்கியபோது, துருப்பிடித்திருந்த அந்த கனமான இரும்பு தூண் எதிர்பாராதவிதமாக அவரது தலையிலேயே சரிந்து விழுந்தது.

தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த பிஷால் வர்மாவை, சக மாணவர்களும் ஊழியர்களும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளையாட்டு உபகரணங்களின் தரம், பராமரிப்பு குறைபாடு அல்லது துருப்பிடித்தது விபத்திற்கு காரணமா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் பாதுகாப்பு தரநிலைகள் முறையாக பின்பற்றப்படாதது குறித்து மாணவர்களும் பெற்றோர்களும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.