தமிழகத்தில் இன்று மழையும் கொட்டும்.. அதிக வெப்பநிலையும் இருக்கும்.. வானிலை எச்சரிக்கை!!
TV9 Tamil News April 10, 2026 10:48 AM

Tamilnadu Weather Today: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், சுமார் 0.9 கிமீ உயரத்தில், ஒடிசா முதல் மன்னார் வளைகுடா வரை தெலங்கானா, ராயலசீமா, உள் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அந்தவகையில், நேற்றைய தினம் தமிழகத்தில் ஒருசில இடங்களில் கடும் வெயிலுக்கு மத்தியில், சற்று குளிர்ச்சியான சூழல் நிலவியதுடன் மழையும் பெய்தது.

இன்று மழைக்கு வாய்ப்பு:

அதன்படி, இன்று (ஏப்.10) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

வரும் நாட்களில் மழை நிலவரம்:

தொடர்ந்து, ஏப்.11ல் தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்ரல் 13, 14ஆம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்ரல் 15ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கூறியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை மாற்றம்:

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. ஏப்ரல் 12ஆம் தேதி ஏப்ரல் 13ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 11ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். ஏப்ரல் 12, 13ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதேசமயம், இன்று (ஏப்.10) அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.