வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் விடுமுறை வழங்கவேண்டும்: மீறும் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை..!
Seithipunal Tamil April 12, 2026 06:48 AM

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில், தேர்தல் நடைபெறும் நாளில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்ட அனைத்து பணியாளர்களுக்கும் வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர மாநகராட்சி தேர்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன், வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

''தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026, வாக்குப்பதிவு நாள் 23.04.2026 (வியாழக்கிழமை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வாக்குப்பதிவு நாளான 23.04.2026 அன்று ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிரிவு 135-B-ன் முக்கிய விதிமுறைகள்:

1.வணிக வர்த்தக, தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரிந்து வாக்காளராக பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு நபரும் வாக்குப்பதிவு நாளில் விடுமுறை பெறுவதற்கு உரிமை உடையவர்.


2.விடுமுறை நாளை காரணமாகக் கொண்டு எந்த ஒரு பணியாளரின் ஊதியத்திலிருந்தும் எந்தவித பிடித்தமும் செய்யக்கூடாது.


3.சுழற்சி முறையில் பணிபுரியும் பணியாளர்கள் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும்.


4.தினக்கூலி / தற்காலிக தொழிலாளர்களும் வாக்குப்பதிவு நாளில் விடுமுறை மற்றும் ஊதியம் பெறுவதற்கு தகுதியுடையவர்கள்.


5.தேர்தல் நடைபெறும் தொகுதிக்கு வெளியே பணிபுரியும் வாக்காளர்களும் இந்த சட்டப் பிரிவின் கீழ் ஊதியத்துடன் கூடிய விடுமுறைக்கு தகுதியுடையவர்கள்.


6.இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் உரிமையாளர்கள், மேற்குறிப்பிட்ட சட்ட விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி வாக்குப்பதிவு நாளான 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று தங்கள் அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குமாறு மாவட்ட ஆணையரும் சென்னை பெருநகர மாநகராட்சி தேர்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன், தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.