தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், உறவினரால் வலுக்கட்டாயமாக உடலில் HIV தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்ட 24 வயது இளம்பெண், நேற்று வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் மனோகர் என்ற நபருடன் இவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், மனோகருக்கு HIV பாதிப்பு இருப்பது தெரிந்ததும் இளம்பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்தை ரத்து செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மனோகர், கடந்த மார்ச் 11-ம் தேதி இளம்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து, தனது உடலில் இருந்து எடுத்த HIV தொற்றுள்ள ரத்தத்தை ஊசி மூலம் அந்த பெண்ணின் உடலில் ஏற்றியுள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தை அடுத்து மனோகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட இளம்பெண் உடனடியாக தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, அவருக்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. இருப்பினும், இந்த கொடூரத் தாக்குதலால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சமூக அவப்பெயர் குறித்த அச்சம் காரணமாக அந்த பெண் கடந்த சில வாரங்களாகக் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் நேற்று தனது வீட்டில் அவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். “மருத்துவ சிகிச்சைகள் தொடர்ந்தாலும், அந்த தாக்குதல் ஏற்படுத்திய மன ரீதியான பாதிப்பே இந்த முடிவுக்குக் காரணம்” எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த வழக்கு தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட கூடுதல் பிரிவுகளின் கீழ் மாற்றப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.