வரி செலுத்துவோருக்கு நல்ல செய்தி...! 30 ஏப்ரலுக்குள் சொத்துவரி செலுத்தினால் 5% தள்ளுபடி...! - தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு
Seithipunal Tamil April 12, 2026 07:48 PM

தூத்துக்குடி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனடியாகச் செலுத்தி, நகர வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்படுகின்றதாவது,"மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடியிருப்போர் மற்றும் வணிகர்கள், சொத்துவரி, காலியிட வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை, குத்தகைத் தொகை, உரிமக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் நிலுவையின்றி விரைவாகச் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நடப்பு நிதியாண்டிற்கான சொத்துவரியை வரும் 30-04-2026க்குள் செலுத்தும் வரி செலுத்துவோருக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சலுகை அதிகபட்சமாக ரூ.5,000 வரை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.வரி செலுத்துவதை எளிமைப்படுத்தும் வகையில் மாநகராட்சி பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.

நேரடியாக மாநகராட்சி கணினி மையங்களில் செலுத்துவதுடன், https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ‘Quick Payment’ வசதியையும் பயன்படுத்தலாம்.மேலும், TN Urban Esevai செயலி மற்றும் Google Pay, PhonePe, Paytm, Fedmobile போன்ற UPI செயலிகள் வாயிலாகவும் விரைவாகவும் சுலபமாகவும் வரிகளை செலுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இத்துடன், எதிர்காலத்தில் வரி வசூல் முறையை மேலும் நவீனமாக்கும் நோக்கில், வரி செலுத்துவோரின் கைபேசி எண்களை சொத்துவரி கணக்குகளுடன் இணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

எனவே, அனைத்து வரி செலுத்துவோரும் தங்களது சரியான கைபேசி எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை மாநகராட்சி மைய அலுவலகம் அல்லது மண்டல அலுவலகங்களை தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.