ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான ஆட்டத்திற்கு முன்னதாக, ஆர்சிபி நட்சத்திர வீரர் விராட் கோலி மும்பையின் ‘கேட்வே ஆஃப் இந்தியா’ பகுதியில் வலம் வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
விராட் கோலி மும்பையிலிருந்து அலிபாக் பகுதிக்கு படகு மூலம் பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் நேற்றும் அவர் அலிபாக் செல்வதற்காக கேட்வே ஆஃப் இந்தியா பகுதிக்கு வந்திருந்தார். அப்போது மிக எளிமையான வெள்ளை நிற டி-ஷர்ட், கருப்பு நிற பேண்ட் மற்றும் தொப்பி அணிந்திருந்த கோலி, மிகவும் ஸ்டைலாகத் தென்பட்டார்.
எளிமையான உடையில் வந்திருந்தாலும், அவரது மணிக்கட்டில் ஜொலித்த கடிகாரம் கடிகாரப் பிரியர்களின் பார்வையில் பட்டது. அவர் அணிந்திருந்தது உலகப்புகழ் பெற்ற ‘பாடெக் பிலிப் அக்வானாட் 5164ஜி’ (Patek Philippe Aquanaut 5164G) வகை கடிகாரம் ஆகும். இதன் அதிகாரப்பூர்வ விலை சுமார் ரூ. 1.4 கோடி என்று கூறப்படுகிறது. 18 கேரட் வெள்ளை தங்கத்தால் (White Gold) ஆனது. இரண்டு நாடுகளின் நேரத்தைக் காட்டும் வசதி மற்றும் பிரத்யேக டிசைன் கொண்டது. உலகத்தரம் வாய்ந்த சொகுசு மற்றும் விளையாட்டுத் தன்மையை ஒருசேரக் காட்டும் இந்தக் கடிகாரம், தற்போது விளையாட்டு உலகில் பேசுபொருளாகியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் கோலி அபாரமான ஃபார்மில் உள்ளார். இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 129 ரன்களைக் குவித்துள்ளார். இன்று (ஏப்ரல் 12) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அவர் பெரிய ஸ்கோரை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஆர்சிபி அணி 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அதேசமயம், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி வெறும் 2 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் திணறி வருவது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram