வருமான வரி அபராத விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் அதிரடி மேல்முறையீடு!
Seithipunal Tamil April 13, 2026 10:48 PM

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், முன்னணி நடிகருமான விஜய், தனக்கு விதிக்கப்பட்ட ரூ.1.5 கோடி வருமான வரி அபராதத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் (Division Bench) இந்த மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கு மத்தியில் இந்தத் சட்டப் போராட்டம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்த விவகாரம் கடந்த 2015-16 ஆம் நிதி ஆண்டைச் சார்ந்தது. அப்போது விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் அவருக்கு ரூ.4.93 கோடி ரொக்கமாக வழங்கியதாகவும், அதற்கு முறையான வரி செலுத்தப்படவில்லை என்றும் வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. சோதனையின் போது பிடிபட்ட ஆவணங்களின் அடிப்படையில், விஜய் தனது கூடுதல் வருமானமான ரூ.15 கோடியை முறையாக வெளிப்படுத்தவில்லை எனக் கூறி, அவருக்கு ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த மனுவை, கடந்த பிப்ரவரி மாதம் தனி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தள்ளுபடி செய்தார். காலதாமதமாக அபராதம் விதிக்கப்பட்டதாக விஜய் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தைச் சட்டப்படி ஏற்க முடியாது என நீதிபதி அப்போது குறிப்பிட்டிருந்தார்.

தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவில், தனி நீதிபதியின் உத்தரவில் உள்ள சட்ட நுணுக்கங்கள் மற்றும் வருமான வரித்துறையின் நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி விஜய் தரப்பு வாதங்களை முன்வைத்துள்ளது. குறிப்பாக, அபராதம் விதிப்பதற்கான கால வரம்பு (Limitation Period) முடிந்துவிட்டதாக மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த வழக்கின் முடிவு விஜய்யின் அரசியல் பிம்பத்திலும் சில தாக்கங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனினும், சட்ட ரீதியான தீர்வைப் பெறுவதில் விஜய் உறுதியாக உள்ளதாகத் தெரிகிறது.

இந்த மேல்முறையீடு குறித்த விசாரணை விரைவில் நீதிமன்றத்தில் வரவுள்ளது. வருமான வரித்துறை தனது தரப்பு விளக்கத்தைச் சமர்ப்பித்த பிறகு, நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கும். 2026 தேர்தலுக்கு முன்னதாக இந்த வழக்கில் சாதகமான முடிவு கிடைக்குமா என்பது தவெக தொண்டர்களிடையே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.