சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு தபால் வாக்குப்பதிவு.. யார் யார் இதை பயன்படுத்தலாம்?
TV9 Tamil News April 16, 2026 11:48 AM

சென்னை, ஏப்ரல் 16, 2026: சென்னையில் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணிகள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தின் சில பகுதிகளில் தபால் வாக்கு சேகரிப்பு தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் ஏப்ரல் 16, 17, 18 ஆகிய மூன்று நாட்களில் நடைபெறும். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும். தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7.00 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6.00 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: திமுகவின் தவறான ஆட்சியையும் ஊழலையும் தமிழகம் இனிமேலும் விரும்பவில்லை – பிரதமர் மோடி

 வாக்குச்சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகள்:

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு வாக்குச்சாவடியும் சிசிடிவி கேமரா கண்காணிப்பில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு படையினரும், சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் தொடங்கிய தபால் வாக்குப்பதிவு:

இந்த நிலையில், தபால் வாக்குப்பதிவு முறை தற்போது தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் அஞ்சல் வாக்குப்பதிவு ஏப்ரல் 16, 17, 18 ஆகிய நாட்களில் நடைபெறும் என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: “அரசியலில் நீங்கள் லாலிபாப் சாப்பிடும் பேபி”.. முதல்வர் ஸ்டாலின் முன்பு விஜய்யை கடுமையாக விமர்சித்த பிரேமலதா..

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தபடியே அஞ்சல் வாக்குப்பதிவு செய்யலாம். இதற்காக தேர்தல் அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வாக்குகளை சேகரிப்பார்கள்.

மேலும், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தபால் வாக்குகளை பதிவு செய்யலாம். தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி மையங்களில் தபால் வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.