நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், வி.சி.க இடம்பெற்றுள்ள கூட்டணியே தேர்தலில் வெற்றி பெறும் என்று உறுதிபடத் தெரிவித்தார். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தபோது அவரை முதலில் வரவேற்றது தான்தான் என்றும், அவர் மீது தமக்கு எந்த தனிப்பட்டக் கோபமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், விஜய்யின் அரசியல் நோக்கம் சரியாக இல்லை என்று விமர்சித்த திருமாவளவன், தி.மு.க கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்று விஜய் கூறுவது யாருக்கு லாபம் அளிக்கும் என்ற கேள்வியையும் எழுப்பினார். விஜய்யால் முதல்வராக முடியுமா என்று கேள்வி எழுப்பிய திருமாவளவன், தி.மு.க-வை வீழ்த்துவதன் மூலம் அவர் மறைமுகமாக யாருக்கு உதவி செய்யப் பார்க்கிறார் என்று சாடினார்.
தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளைப் பிரித்து, அந்த வாக்குகளை பா.ஜனதாவுக்குச் சாதகமாக்க விஜய் முயல்வதாக அவர் குற்றம் சாட்டினார். எனவே, பொதுமக்கள் ஒரு ஓட்டு கூட விஜய்க்குப் போய்விடாதபடி கவனமாக இருக்க வேண்டும் என்றும், தி.மு.க கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.