"திமுக விஜய்யைக் குறைத்து எடைபோடுகிறது... திமுக வெற்றியைத் தவிடுபொடியாக்குவார்!" - கயல்விழி அழகிரி பேட்டி!
Dinamaalai April 16, 2026 10:48 PM

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், மதுரையைச் சேர்ந்த மு.க.அழகிரியின் மகள் கயல்விழி அளித்துள்ள பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தற்போதைய நான்கு முனைப் போட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒரு முக்கியப் காரணியாக இருப்பார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை விமர்சிக்கவில்லை என்று குறிப்பிட்ட கயல்விழி, "திமுகவுக்குப் பெரிய எதிர்ப்பு இல்லை என்று நினைத்த நேரத்தில் விஜய் களமிறங்கியது ஆட்டத்தையே மாற்றிவிட்டது. விஜய்யின் வருகையால் திமுகவின் ஓட்டு வங்கி சிதறும், அவர் நிச்சயம் கணிசமான வாக்குகளைப் பிரிப்பார். திமுக அவரை மிகவும் சாதாரணமாக நினைத்து எடைபோடுகிறது; ஆனால் விஜய் பிரிக்கும் வாக்குகள் திமுகவின் வெற்றியைத் தவிடுபொடியாக்கும்" என எச்சரித்துள்ளார். விஜய்யின் இந்தத் தாக்கம் ஒரு 'தொங்கு சட்டசபை' அமையக் கூட வாய்ப்புள்ளதாக அவர் கணித்துள்ளார்.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடு குறித்துப் பேசிய அவர், "கட்சியின் சீனியர்களையும், எனது அப்பாவையும் (மு.க.அழகிரி) அனுசரித்துச் சென்று அவர்களின் அனுபவத்தைப் பயன்படுத்த ஸ்டாலின் தவறிவிட்டார். இது கட்சியின் பல மூத்த நிர்வாகிகளிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சர்வாதிகாரமாகச் செயல்படுவது திமுகவின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும்" என வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார். தேர்தலுக்குச் சில நாட்களே உள்ள நிலையில், அழகிரியின் மகளே இப்படிப் பேசியிருப்பது அறிவாலய வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.