வானதி சீனிவாசன் உடல்நிலை.. எப்போது டிஸ்சார்ஜ்? மருத்துவமனை அதிகாரப்பூர்வ விளக்கம்!
TV9 Tamil News April 17, 2026 01:48 AM

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவரும், கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான வானதி சீனிவாசன் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். அப்போது, அவரது வலது காலில் திடீரென வீக்கம் ஏற்பட்டதுடன் வலியும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 10- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, காலில் ஏற்பட்ட வீக்கம் மற்றும் தொற்றுக்கு மருத்துவமனை சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், வானதி சீனிவாசன் எம்எல்ஏ காலில் ஏற்பட்ட தொற்றுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக, அவர் 2 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவமனை தெரிவித்திருந்தது. இதனிடையே, காலில் ஏற்பட்ட தொற்றுக்கு சிகிச்சை அளித்த போது, ஒரு மருந்து அவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியது.

தீவிர சிகிச்சை பிரிவில் வானதி சீனிவாசன்

இதைத் தொடர்ந்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு மூன்று முதல் நான்கு நாட்கள் வரை தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், வானதி சீனிவாசன் உடல் நிலை தொடர்பாக பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அந்த விளக்க அறிக்கையில், வானதி சீனிவாசன் எம். எல். ஏவுக்கு காலில் ஏற்பட்ட தொற்றுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக அவர் முழுமையாக குணமடைந்துள்ளார்.

மேலும் படிக்க: மு.க.ஸ்டாலின் ஐயா ஒரு கீ கொடுக்கும் பொம்மை.. அண்ணாமலையின் அனல் பறக்கும் பேச்சு!

சிகிச்சை முடிந்து நாளை வீடு திரும்பும் வானதி சீனிவாசன்

அதன்படி, நாளை வெள்ளிக்கிழமை ( ஏப்ரல் 17) சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காலில் ஏற்பட்ட தொற்று காரணமாக கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசனால் பரப்புரை மேற்கொள்ள முடியாமல் போனது. இதன் காரணமாக தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். இதேபோல, டெல்லி முதல் அமைச்சர் ரேகா குப்தா கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக வாக்குத் திரட்டினார்.

தேர்தல் பரப்புரையில் குதித்த வானதி மகன்கள்

மேலும், வானதி சீனிவாசன் எம். எல். ஏ. வின் மகன்கள் தேர்தல் பணிகளை முழுமையாக ஏற்று தொண்டர்களை உற்சாகப்படுத்தி அவருக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, வானதி சீனிவாசன் மருத்துவமனையில் இருந்தவாறு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், ஒரிரு நாள்களில் குணமடைந்து வீடி திரும்பி விடுவேன். எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கும், பிரசாரம் செய்தவர்களுக்கு நன்றி என்று தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க: அன்புமணிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை.. நீதிமன்றத்தில் ராமதாஸ் அதிரடி மனு!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.