— தேஜஸ்வி சூர்யா —
தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்
கடந்த முறை இந்திய நாடாளுமன்ற வரைபடத்தை தேசம் வரைந்த போது, 1971 இல், அதன் மக்கள் தொகை 55 கோடி. இன்று இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடி. ஆனால் லோக்சபாவின் உறுப்பினர் எண்ணிக்கை அதே 543. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியம். ஜனநாயகத்தின் கட்டாயம்.
இன்று ஒவ்வொரு உறுப்பினரும் சுமார் 26 லட்சம் பேர்களை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். இந்த கோணலுக்கு காரணம் 50 ஆண்டுகளுக்கு முன்பு உறுப்பினர் எண்ணிக்கையை அதே நிலையில் உறையச் செய்ததேயாகும். அப்போது அது தற்காலிகம் என்று கூறப்பட்டது. அதற்கான காரணமும் தெளிவாக இருந்தது.
தென்னக மாநிலங்கள் பெண் கல்வி , பொது சுகாதாரம் ஆகியவற்றில் அக்கறையுடன் செயல்பட்டதால் பிறப்பு விகிதம் குறைந்தது. அப்போது மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறு வரையறை என்பது தென்னக மாநிலங்களை தண்டிப்பதாகவும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கு பரிசளிப்பதாகவும் மாறி இருக்கும்.
உறுப்பினர் எண்ணிக்கையை உறையச் செய்தது 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை நீடிக்கும் என்று பின்னர் முடிவெடுக்கப்பட்டது. தொகுதிகளின் எல்லையை 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாற்றி அமைக்கப்பட்ட போதிலும் தொகுதிகளின் எண்ணிக்கை மாறாமல் அப்படியே இருந்தது. 2027 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில் தொகுதிகளை மறு வரையறை செய்து, எண்ணிக்கையை அதிகரிப்பதை இனியும் தள்ளி போட முடியாது.
நாடாளுமன்றம் இந்த விஷயத்தில் எதையும் செய்யவில்லை என்றால் தென்னக மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். புதிய மக்கள் தொகை விவரங்கள் வெளியானால் அரசமைப்பு சட்டப்பிரிவு 81, 82 மற்றும் 330 அ ஆகியவற்றின்படி தொகுதி மறு வரையறை செய்ய வேண்டி வரும். இப்போதுள்ள 543 என்பது 550 தாக மாறும் . இது மக்கள் தொகைக்கு ஏற்ப மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். இதனால் தென்னக மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். வடமாநிலங்களுக்கு சாதகமாக முடியும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறு வரையறை செய்தாலும் கூட அது தென்னக மாநிலங்களுக்கு சாதகமாக அமையாது.
இத்துடன் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் . அதன்படி கேரளத்திற்கு கிடைக்கும் 12 உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 4 பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யும் போது வெறும் 8 தொகுதிகள் மட்டுமே மற்றவர்களுக்கு கிடைக்கும். இன்று கேரளத்திற்கு 19 ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் 11 பேர்களுக்கு போட்டியிட தொகுதிகள் இருக்காது.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார். இதனால் ஒரு பகுதி மாநிலங்களின் எண்ணிக்கை குறைவதும் வேறொரு பகுதி மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் தடுக்கப்படும். மாநிலத்துக்குள்ளே 2011 மக்கள் தொகையின்படி தொகுதிகளின் எல்லை மாற்றி அமைக்கப்படும். அதே வேளையில் மாநிலங்களுக்கு இடையேயான சமநிலை இப்பொழுது உள்ளபடியே பாதுகாக்கப்படும்.
எண்ணிக்கைதான் விஷயமே. கர்நாடகத்தின் எண்ணிக்கை இப்போதுள்ள 28 ல் இருந்து 42 ஆக உயரும். தமிழ்நாட்டில் எண்ணிக்கை 39 லிருந்து 59 ஆகும். கேரளத்திற்கு 20 இருந்து 30 ஆக உயரும். ஆந்திர பிரதேசத்துக்கு 25 இருந்து 28 ஆகவும் தெலுங்கானாவிற்கு 17 லிருந்து 26 ஆகவும் மாறும். ஐந்து தென்னக மாநிலங்களுக்கு ஒட்டுமொத்தமாக 66 உறுப்பினர்கள் அதிகமாக கிடைப்பார்கள். அதே வேளையில் ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தில் இப்போது உள்ள 23.7 சதவீத பங்கு அப்படியே நீடிக்கும். மத்தியில் அரசமைக்கும் விகிதாச்சார கணக்கில் மாற்றம் ஏற்படாது.
மோடி அரசின் இந்த இடையீடு இல்லாவிட்டால் தமிழ்நாடு 8 உறுப்பினர்களை இழக்கும் . ஆனால் புதிய திட்டத்தின் படி 20 உறுப்பினர்கள் அதிகம் கிடைப்பார்கள். கேரளம் மூன்றில் ஒரு பகுதியை இழப்பதற்கு பதிலாக பத்து இடங்கள் அதிகமாக பெறும். எனவே இந்த திட்டத்தை எதிர்ப்பது தென்னக நலன்களை எதிர்ப்பதாகும் . இந்த திட்டம் ஒட்டுமொத்த தேசத்திற்காக தென்னக குரலை ஒடுக்கி கொள்வதல்ல. மாறாக அதிக உறுப்பினர்கள் எண்ணிக்கையை பெற்றுக் கொள்வதும் ,அதே வேளையில் விகிதாச்சார கணக்கின்படி தங்கள் பங்கை அப்படியே தக்க வைத்துக் கொள்வதும் ஆகும். தண்டிக்கப்படாமல் தப்புவதாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது அரசாட்சியை மேம்படுத்தும். இன்று கர்நாடகத்தில் உள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 25 லட்சம் மக்களை பிரதிநிதித்துவம் செய்கிறார். விரிவாக்கத்துக்கு பிறகு இந்த எண்ணிக்கை 16 லட்சத்துக்கு ஒருவரென ஆகும். தமிழ்நாட்டில் இது 19 லட்சத்தில் இருந்து 13 லட்சமாக மாறும். சிறிய தொகுதி என்றால் மக்கள் தங்கள் பிரதிநிதியை சந்திப்பது எளிதாகும் . இது பிரதிநிதிகளின் செயல்பாட்டை மேம்படுத்தும் . வலிமையான ஜனநாயகத்துக்கு வழிவகுக்கும்.
எதிர்க்கட்சிகள் சில மாற்று யோசனையை முன் வைக்கிறார்கள். அவை எதுவும் வலுவாக இல்லை. மாநிலத்தின் மொத்த உற்பத்தியுடன் (GSDP) தொகுதி எண்ணிக்கையை இணைத்தால் மகாராஷ்டிரம், குஜராத் போன்ற ஒரு சில மாநிலங்களின் கையில் அதிகாரம் அடைக்கலம் ஆகிவிடும். பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு ஏற்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையும் மாறிக்கொண்டே இருக்கும்.
விகிதாச்சாரப்படி எண்ணிக்கையை குறைக்கலாம் என்று சசி தரூர் கூறுகிறார். அவ்வாறு செய்வது ஒருவருக்கு ஒரு ஓட்டு ஒவ்வொரு ஓட்டும் சம மதிப்பு என்பது மாறி புவியியலுக்கு ஏற்ப ஒவ்வொரு ஓட்டுக்கும் வெவ்வேறு மதிப்பு என்றாகிவிடும். இதனால் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்கள் மிக மோசமாக பாதிக்கப்படும்.
சாரமாக பார்த்தால் இரண்டு விஷயங்களை ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. ஒன்று, எந்தவிதமான மாற்றமும் செய்யாவிட்டால் தென்னக மாநிலங்கள் இழப்பை சந்திக்கும். மற்றொன்று, ஒவ்வொரு மாநிலத்திற்கும் கூடுதல் உறுப்பினர்கள் கிடைக்கும். எந்த மாநிலமும் இப்போதுள்ளதை இழக்க வேண்டாம். அரசாட்சி மேம்படும் . மத்திய அரசு முன் வைத்துள்ள திட்டம் இதைதான் சொல்கிறது . இது தென்னகத்தை பாதுகாக்கும். ஜனநாயகத்தை வலுப்படுத்தும். மகளிர் இடஒதுக்கீட்டை எந்தவிதமான சுணக்கமும் இல்லாமல் நடைமுறைப்படுத்த வழிவகுக்கும் . இதுதான் நடைமுறைக்கு மிகவும் ஏற்புடையது . சீரியது. முற்போக்கானது. நான் இதை ஆதரிக்கிறேன். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் நேர்மையாக அலசி பார்த்து என்னைப் போலவே ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்
கட்டுரையாளர் தெற்கு பெங்களூரு தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்
மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே! News First Appeared in Dhinasari Tamil