ஜனநாயகன் படம் லீக் ஆனது எப்படி..? ஃப்ரீலான்ஸ் எடிட்டர் அனுமதியற்ற வகையில் திருடிச் சென்றாரா..?
Seithipunal Tamil April 17, 2026 04:48 AM

விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் கசிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எப்படி இணையத்தில் கசிந்தது என்பது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி வெளியாக இருந்த நிலையில், சென்சார் பிரச்சினை காரணமாக படம் வெளியாகவில்லை. இதையடுத்து அண்மையில் ஜன நாயகன் திரைப்படம் சட்ட விரோதமாக இணையத்தில் வெளியாகி எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்தது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து, படத்தை பகிரவோ, தரவிறக்கம் செய்யவோ கூடாது என்றும், மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன் தெரிவித்தது.

இந்நிலையில் 'ஜனநாயகன்' படத்தை சட்டவிரோதமாக வெளியிட்ட முக்கிய குற்றவாளிகளை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;

''தமிழ்நாடு இணையவழி குற்ற தடுப்பு பிரிவானது, தொடர்ச்சியான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஜனநாயகன் திரைப்படத்தின் ஆன்லைன் கசிவு தொடர்பாக 11.04.2026 அன்று SCCIC குற்ற எண். 47/2026 பதிவு செய்யப்பட்டது.

திருட்டு உள்ளடக்கத்தை பரப்புவதிலும் பதிவேற்றுவதிலும் ஈடுபட்ட குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மூன்று முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். விரிவான தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் சான்றுகளின் பரிசோதனையின் அடிப்படையில், இணையவழி குற்றப்பிரிவு 15.04.2026 அன்று தகவல் திருட்டு மற்றும் ஜனநாயகன் திரைப்படத்தின் திருட்டு நகலை பரப்பியதற்காக மூன்று குற்றவாளிகளை கைது செய்துள்ளது.

முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர் மற்றொரு திரைப்படத்திற்காக எடிட்டிங் ஸ்டுடியோவில் ஃப்ரீலான்ஸ் உதவி எடிட்டராக பணிபுரிந்தார். இருப்பினும், எடிட்டிங் ஸ்டுடியோவில் 'ஜனநாயகன்' திரைப்படத்தை அனுமதியற்ற வகையில் திருடிச் சென்றார். திருடப்பட்ட தரவு திரைப்படமாக இணையத்தில் பகிரப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, திருட்டு உள்ளடக்கத்தை பதிவிறக்கம் செய்யவோ, ஸ்ட்ரீம் செய்யவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று பொதுமக்கள் கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்தகைய உள்ளடக்கத்தை அனுப்புவது அல்லது ஊக்குவிப்பது உட்பட டிஜிட்டல் திருட்டுத்தனத்தில் எந்தவொரு ஈடுபாடும் கடுமையான சட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.