150 நாட்கள் திரையில் ஓடி சாதனை; 20 விருதுகளில் 04 தேசிய விருது பெற்ற படம்...!
Seithipunal Tamil April 17, 2026 04:48 AM

மலையாள சினிமாவில் முக்கியமான படம் 'கேரள வர்ம பழசி ராஜா'. 04 தேசிய விருதுகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட விருதுகளை வாரி குவித்துள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு பழம்பெரும் இயக்குநர் ஹரிஹரன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த படம்.

இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தில் சரத்குமார், திலகன், கனிகா, பத்ம ப்ரியா, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுமார் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ரூ.50 கோடி வசூலை நெருங்கியது. அதுவரை மலையாள சினிமாவில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றது.

மேலும், சிறந்த படம், ஸ்பெஷல் ஜூரி, சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலிப்பதிவு ஆகிய 04 பிரிவுகளில் தேசிய விருது பெற்று அசத்தியது இந்தப் படம். அத்துடன், கேரள அரசின் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகள் இந்தப் படத்துக்கு கிடைத்தன. மேலும் இந்தப் படம் 150 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

அதாவது, 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய அரசர் பழசி ராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டது. கடந்த 1976-ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி கேரளாவின் மலபாரைக் கைப்பற்றுகிறது. அதற்கு எதிராக போராடுகிறார் மன்னன் பழசிராஜா. மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தியவர்.

அவருக்கும் - பிரிட்டிஷ் அரசுக்கும் இடையே நடந்த மோதல் தான் இந்தப் படத்தின் ஒன்லைனாகும். போர் காட்சிகள் இந்தப் படத்தில் மிகவும் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். பிரிட்டிஷூக்கு எதிராக பழசிராஜா எப்படி வென்றார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் இந்தப் படத்தின் திரைக்கதை ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தில் மம்மூட்டி, பத்ம ப்ரியாவின் நடிப்பு பரவலான பாராட்டைப் பெற்றது. தமிழ் மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழில் படத்துக்கு கமல்ஹாசன் குரல் கொடுத்திருந்தார். இந்தியில் ஷாருக்கான் டப்பிங் செய்திருந்தார். மலையாள சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாக ‘கேரள வர்ம பழசி ராஜா’ இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிற ஒரு கிளாசிக் திரைப்படமாகும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.