தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!
Dhinasari Tamil April 17, 2026 02:48 AM

இன்று, நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொகுதி மறுவரையறை செய்யப்படுவதால், தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39-லிருந்து 59 ஆக அதிகரிக்கும் என்றும், மக்களவையில் தமிழகத்தின் பலம் 7.18%-லிருந்து 7.23% ஆக உயரும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா தெளிவு படக் கூறினார். 

தொகுதி மறுவரையறைக்குப் பிறகு மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை 543இல் இருந்து 816ஆக உயரும் என்றும், தென் மாநிலங்களின் எண்ணிக்கை குறையாது என்றும் குறிப்பிட்ட அமித் ஷா, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 39 எம்.பி.க்கள் (7.18%) உள்ள நிலையில் அது 59 எம்.பி.க்கள் (7.23%) ஆக உயரும் என்றார். 

மேலும் தென்மாநிலங்கள் குறித்துக் குறிப்பிட்ட அவர், கேரளாவில், 20இல் இருந்து 30ஆகவும், கர்நாடகாவில் 28இல் இருந்து 42 ஆகவும், ஆந்திராவில் 25இல் இருந்து 38 ஆகவும், தெலங்கானாவில் 17இல் இருந்து 26ஆகவும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை உயரும் என்றார். 

தற்போது தென் மாநிலங்களில் இருந்து 129 எம்பிக்கள் உள்ள நிலையில், அது 195 ஆக உயரும். அதாவது சதவிகித அடிப்படையில் 23.76இல் இருந்து 23.97%ஆக உயரும். 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தொகுதி மறுவரையறை அமலுக்கு வராது என்றும் மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்தார். 

இந்த விவாதத்தின் போது, தொகுதி மறுவரையறை குறித்து எதிர்க்கட்சிகள் வதந்திகளைப் பரப்பக் கூடாது என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில், மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். 12 மணி நேரம் விவாதம் நடக்கும்; நாளை மாலை 4 மணிக்கு ஓட்டெடுப்பு நடக்கும் என்று அவைத்தலைவர் ஓம்பிர்லா அறிவித்துள்ளார். 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கிரண் ரிஜிஜூ கூறியதாவது:

எதிர்க்கட்சிகளுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். தயவுசெய்து தொகுதி மறுவரையறை குறித்து வதந்திகளைப் பரப்பாதீர்கள். தொகுதி மறுவரையறை என்ற சாக்கில், மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்காதீர்கள். அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் நான் குறிப்பாக ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.

வதந்திகளைப் பரப்பி தென் மக்களைத் தவறாக வழிநடத்தாதீர்கள். மேலும், வேறு சில பிரச்னைகளை எழுப்பி, இந்த நல்ல நோக்கத்தைத் தவறாகப் புரிந்துகொள்ளவோ அல்லது திரித்துக்கூறவோ வேண்டாம். மகளிர் இட ஒதுக்கீட்டைத் தோற்கடிப்பதற்கு எந்த ஒரு காரணத்தையும் கூறாதீர்கள்

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மகளிர் இட ஒதுக்கீடு தோற்கடிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, அனைத்துக் கட்சிகளும் இதற்கு ஆதரவளிக்கும் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன் – என்றார் அவர்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்! News First Appeared in Dhinasari Tamil

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.