“விஜய் சொன்னதுமே மாஸ்... தமிழகம் முழுவதுமே விசிலால் நிறைந்த வாசல்கள் - வைரலாகும் 'விசில் கோலம்'!
Dinamaalai April 17, 2026 09:48 AM

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டதோடு, தமிழகப் பெண்களிடம் ஒரு உருக்கமான வேண்டுகோளையும் விடுத்திருந்தார். “எனக்காக உங்கள் வீட்டு வாசலில் ‘விசில்’ சின்னத்தைக் கோலமாகப் போடுங்கள்” என்று அவர் பேசிய சில மணி நேரங்களிலேயே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தவெக தொண்டர்களும், பெண் ஆதரவாளர்களும் களத்தில் இறங்கிவிட்டனர்.


சென்னை முதல் குமரி வரை விஜய்யின் வேண்டுகோளை ஏற்று, இரவு நேரத்திலேயே பல வீடுகளின் வாசல்களில் ‘விசில்’ சின்னம் கோலமாக ஜொலிக்கத் தொடங்கியுள்ளது. ரங்கோலி வண்ணங்களால் விசில் சின்னத்தை வரைந்து, அதன் கீழே “நம்ம அண்ணனுக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்”, “வெற்றி நிச்சயம்”, “நமது சின்னம் விசில்” போன்ற வாசகங்களை எழுதி அதனைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

விஜய் வேண்டுகோள் விடுத்து சில மணி நேரங்களிலேயே இணையதளம் முழுக்க இந்த ‘விசில் கோலங்கள்’ ஆக்கிரமித்துள்ளன. “தலைவன் ஒரு வார்த்தை சொன்னா, அதைத் தட்டாமச் செய்வோம்” எனத் தொண்டர்கள் உற்சாகத்துடன் பதிவிட்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், விஜய்யின் இந்த ‘கோல வியூகம்’ குடும்பப் பெண்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாசல் கோலங்கள் மூலமே தங்களது ஆதரவை வெளிப்படுத்தும் பெண்களின் இந்தச் செயல், தவெக வட்டாரத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.