திண்டுக்கல் மாவட்டம் பழனியில், தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டியை ஆதரித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடையே அவர் பேசியதாவது,
“வழக்கமாக சாமி சிலைகளைத் திருடும் கும்பலைத் தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், தற்போது சாமியையே திருடும் கும்பல் வந்துள்ளது. இந்தத் தேர்தல் என்பது மூன்று விதமான ‘மாடல்களுக்கு’ இடையிலானப் போட்டி. அதன்படி,
திராவிட மாடல்: இது மக்களுக்குக் கல்வியைக் கொடுத்தது. இந்தியாவுக்கே முன்னுதாரணமான மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்தியது. மொழி மானத்தைக் காத்த இந்த மாடல், தற்போது இன மானத்தைக் காக்கப் போராடுகிறது.
அடிமை மாடல்: நமது சுயமரியாதையையும், தன்மானத்தையும் மோடியிடம் அடகு வைப்பதே அடிமை மாடல். மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி. இடங்களை மாற்றியமைக்கும் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கப் பார்க்கிறார்கள். இதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி கட்சியினர் வாய்மூடி மௌனமாக இருக்கின்றனர்.
தொடர்ந்து ‘சினிமா மாடல்’ குறித்துப் பேசிய அவர், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை மறைமுகமாக விமர்சித்தார். சினிமாவில் ஒருவர் மருத்துவராகவோ, பொறியாளராகவோ, ஏன் முதல்வராகவோ கூட நடிக்கலாம். ஆனால் அரசியலுக்கு வந்த உடனேயே முதல்வராகிவிட முடியுமா? தமிழக மக்கள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்தபோது, அவர்களுக்காக அவர் களத்தில் நின்றதுண்டா? எனது அளவுக்குக் கூட அவர் அரசியல் பேசியது கிடையாது.
சினிமாத் திறமையால் மக்கள் வைத்துள்ள அன்பை அரசியலுக்குப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள். ஒரு நடிகரைப் பிடித்தால் விசில் அடிக்கலாம், ஆனால் நாட்டை அவர் கையில் கொடுத்துவிட முடியுமா? இந்தத் தேர்தல் என்பது நாட்டின் ஒற்றுமைக்கும், பிரிவினைவாதத்திற்கும் இடையிலான தேர்தல். எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார்