மயிலாடுதுறை: மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சித்தமல்லி பழனிச்சாமியை ஆதரித்து, பிரபல திரைப்பட இயக்குநரும் நடிகருமான தங்கர் பச்சான் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மயிலாடுதுறை மக்கள் புத்திசாலித்தனமாக வாக்குகளைப் பயன்படுத்தாத காரணத்தால் தான், காங்கிரஸ் கட்சித் தலைமை தொடர்ந்து வெளியூர் வேட்பாளர்களை இங்கே திணித்து வருவதாகக் கடுமையாகச் சாடினார்.
மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மணல்மேடு, கடலங்குடி, காளி மற்றும் குத்தாலம் ஆகிய பகுதிகளில் மாம்பழம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டி தங்கர் பச்சான் உரையாற்றினார். கடலங்குடியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அவர் பேசுகையில்:
"மக்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் வெற்று சினிமா மாயைகளை விட, மக்களின் முன்னேற்றத்திற்காகக் களத்தில் நின்று போராடுவதையே நான் பெரிதும் விரும்புகிறேன். கடந்த தேர்தல்களில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசி, மக்களிடம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவர்கள், இன்று விவசாயிகளின் நலனை முற்றிலும் மறந்துவிட்டனர்.
குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து கொண்டு, செருப்பு அணிந்து சிமெண்ட் சாலையில் நடப்பவர்களுக்கு விவசாயத்தின் வலி ஒருபோதும் புரியாது. மண்ணோடு மண்ணாகக் கிடந்து போராடும் விவசாயிகளின் துயரத்தை உணர்ந்தவர்கள் மட்டுமே அவர்களுக்குச் சரியான தீர்வையும் விடியலையும் தர முடியும்."
தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசின் இளைஞர் நலத் திட்டங்களை விமர்சித்தவர் "இளைஞர்களுக்கு நிரந்தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதுதான் ஒரு அரசின் கடமை. அதை விடுத்து, வெறும் உதவித்தொகை வழங்கி இளைஞர்களை ஏமாற்றும் போக்கை நிறுத்த வேண்டும். மயிலாடுதுறை மண்ணின் வளம் காக்கப்பட வேண்டும் என்றால், இங்கு விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அதிகளவில் உருவாக்கப்பட வேண்டும். அதற்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி அவசியமானது. தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்குப் பாமக ஆற்றிய பெரும்பங்கு வரலாற்றுச் சிறப்புமிக்கது" என்றார்.
காளி கிராமத்தில் பரப்புரை மேற்கொண்டபோது அந்தப் பகுதியின் அவல நிலை குறித்து வருத்தம் தெரிவித்தார். "காளி கிராமம் இன்று இருண்டு கிடக்கிறது. மின்சாரம் கம்பிகளில் மட்டுமே இருக்கிறது, மக்களின் வீடுகளில் இல்லை. மன்னராட்சி காலத்தில் மன்னர்கள் மக்களின் குறைகளை அறிய மாறுவேடத்தில் நகர்வலம் வருவார்கள். ஆனால், இன்றைய திமுக ஆட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை நேரில் சந்திப்பதில்லை. அவர் ஒருமுறை நேரில் வந்து பார்த்தால்தான் இங்குள்ள மக்களின் உண்மையான நிலைமை அவருக்குப் புரியும்" என்றார்.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேர்வைக் குறித்துப் பேசுகையில் அவர் மிகவும் ஆவேசமாகத் தனது கருத்துகளைப் பதிவு செய்தார். "மயிலாடுதுறையில் மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர். புத்திசாலித்தனமாக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்காமல், இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் சம்பந்தமில்லாத வெளியூர் ஆட்களைத் தேர்ந்தெடுத்தது மக்களின் தவறுதான். மக்களின் இந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டுதான் காங்கிரஸ் கட்சி வெளியூரிலிருந்து வேட்பாளர்களைக் கொண்டு வந்து நிறுத்துகிறது. காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நலனை விடப் பணம் மட்டுமே முக்கியமாகத் தெரிகிறது. இதுவரை நீங்கள் உங்கள் வாக்குகளைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. இந்த முறை காங்கிரஸைத் தோற்கடித்துப் பாருங்கள், அடுத்த முறை வெளியூர் வேட்பாளர்களை நிறுத்த அவர்களுக்குத் துணிச்சல் வராது.
திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிவிட்டது. எனவே, இந்த மண்ணின் மைந்தராகக் களத்தில் இருக்கும் பாமக வேட்பாளருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெரும் வெற்றியைத் தேடித்தர வேண்டும்" என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.