“இந்த நாடகமெல்லாம் எடுபடாது! ராமதாசை கிழவன் எனக்கூறி கொலை செய்ய வேண்டும் என எழுதுகிறார்கள்”- ஜி.கே.மணி
Top Tamil News April 17, 2026 08:48 PM

ராமதாசிடமிருந்து அன்புமணியை நான் பிரித்து விட்டேன் என கூறுவது எனக்கு வேதனையாக உள்ளது என்று தைலாபுரத்தில் ஜிகே மணி பேட்டி அளித்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, “எனக்கு அவதூறான அவமானப்படுத்துகிற, கொச்சைப்படுத்துகிற ஒரு துரோகி என்ற பட்டத்தை, பொய்யான செய்தியை சொல்லி அன்புமணி அவமானப்படுத்தியுள்ளார். தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் மூன்றாவது மிகப் பெரிய கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற, உறுப்பினர்கள் என ஏராளமானவர் இருந்தனர். அப்படி உருவாக்கிய கட்சியை இன்றைக்கு அன்புமணி சிதைத்துள்ளார். மருத்துவர் ராமதாசை மிகவும் அவமானப்படுத்துகிறார்கள். அன்புமணி சிலரை வைத்துக் கொண்டு முகநூலில் மருத்துவர் ராமதாசை அவமானப்படுத்துகிறார்கள். மருத்துவர் அன்பு மணியோடு இருக்கும் சிலர் மருத்துவர் ராமதாசை கிழவன் எனக்கூறி கொலை செய்ய வேண்டும் என எழுதுகிறார்கள். 

அன்புமணி அவரின் மகள் மூலமாக, என்னையும் என் தந்தையும் பிரித்தது ஜிகே.மணி என கூற வைக்கிறார். இது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. மருத்துவர் ராமதாசையும், அன்புமணியையும் எந்த சக்தியால் பிரிக்க முடியும். மருத்துவர் ராமதாசிடம் உங்கள் மகனை பார்க்க வேண்டாம் எனக் கூற எனக்கு மனசு வருமா?. அப்படி சொன்னாலும் மருத்துவர் ராமதாஸ் தான் கேட்பாரா?. அன்புமணி, ராமதாசை பார்க்க வந்தால், பார்க்கக் கூடாது என எங்களால் சொல்ல முடியுமா?. மருத்துவர் அன்புமணி வருவதை யாரும் தடுக்கவில்லை. சேலம் பரப்பரை கூட்டத்தில் மருத்துவர் ராமதாசுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அன்புமணி வந்திருக்கலாம். பெற்ற தந்தை, வளர்த்து ஆளாக்கியவர், மத்திய அமைச்சர் தலைவர் பதவியை கொடுத்தவர். அப்பாவை பார்க்க மருத்துவமனைக்கு வரவில்லை. அன்புமணிக்கு அப்பா மீது அக்கறை இருந்திருந்தால் மருத்துவமனைக்கு ஓடி வந்திருக்க வேண்டும். அவருடைய மனைவி வந்திருக்கலாம், பெண் குழந்தைகள் வந்திருக்கலாம். மறுநாள் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தோம், அங்கு வந்து பார்த்திருக்கலாம். எதற்கும் வராத ஒரு மகன். ஜிகே.மணி மருத்துவர் ராமதாஸ் உடன் இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக எங்கள் குடும்பத்தை பிரித்து விட்டார் அன்புமணி கூறுகிறார். அன்புமணி மகள்கள் தாத்தாவை பார்க்க விடாமல் ஜிகே.மணி தடுத்துவிட்டார் என கூறுகிறார்கள். இது எவ்வளவு பெரிய நாடகம். இந்த நாடகம் எடுபடாது. உங்களுக்கு அப்பா வேண்டும், தாத்தா வேண்டும் என்றால் நேரடியாகவே வந்து பார்க்கலாம். நாங்கள் தடையாக இருக்க மாட்டோம்” எனக் கூறினார்.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.