தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தேர்தல் சூடு அதிகரித்து வரும் நிலையில் நடைபெற்ற இந்த பிரசார கூட்டம் உற்சாகமான தருணங்களுக்கு சாட்சியாக அமைந்தது.
மதுரை மற்றும் ஆண்டிப்பட்டி பகுதிகளில் வாக்கு சேகரிப்பை முடித்துவிட்டு போடிக்கு வந்த உதயநிதி, “தேனி மாவட்டத்துடன் எனக்கு ஒரு தனி தொடர்பு இருக்கிறது. என் அரசியல் பயணத்தின் ஆரம்பம் இதே மாவட்டம்” என்று நினைவுகூர்ந்தார். ஓ. பன்னீர்செல்வம் குறித்து பேசும்போது, “எளிய பின்னணியில் இருந்து உயர்ந்தவர். அவரை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
கடந்த தேர்தலில் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஏற்பட்ட தோல்வியை நினைவுபடுத்திய அவர், “இந்த முறை குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
அப்போது கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் “50 ஆயிரம் வேண்டாம்… 1 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!” என்று முழக்கமிட்டனர். இந்த எதிர்பாராத பதில், மேடையில் இருந்த ஓ. பன்னீர்செல்வத்தை நெகிழ்ச்சியடையச் செய்தது. அவர் புன்னகையுடன் அதனை வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து, “சரி, 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்” என்று உதயநிதியும் உறுதிபடுத்தி, அடுத்த ஒரு வாரம் இதே உற்சாகத்துடன் களப்பணியில் ஈடுபட வேண்டும் என தொண்டர்களை கேட்டுக் கொண்டார்.
தேர்தல் நெருங்கும் நிலையில், போடி தொகுதியில் இந்த கூட்டம் அரசியல் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.