சதியா? கொலையா? அமெரிக்காவில் அடுத்தடுத்து மாயமான 10 முக்கிய விஞ்ஞானிகள்... தீவிர விசாரணைக்கு ட்ரம்ப் உத்தரவு!
Dinamaalai April 19, 2026 09:48 AM

அமெரிக்காவின் பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஏலியன் தொடர்பான ரகசிய ஆய்வுகளில் ஈடுபட்டு வந்த 10 முக்கிய விஞ்ஞானிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் காணாமல் போனதும், சிலர் உயிரிழந்ததுமான தகவல் உலக நாடுகளை உலுக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் ஏதோ ஒரு பெரிய சதி ஒளிந்திருப்பதை உணர்ந்த அதிபர் டொனால்டு டிரம்ப், இது குறித்து எப்.பி.ஐ உள்ளிட்ட உயர்மட்ட அமைப்புகள் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாசாவின் ஜெட் உந்துவிசை ஆய்வகத்தில் பணியாற்றிய மைக்கேல் டேவிட் ஹிக்ஸ் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான காரணம் இன்றுவரை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மசாச்சூசெட்ஸ் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட ஜேசன் தாமஸ், பாஸ்டன் வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட எம்.ஐ.டி பேராசிரியர் நூனோ லூரேரோ எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், அணு ஆயுதப் பிரிவில் பணியாற்றிய ஸ்டீவன் கார்சியா, விண்வெளி ஆய்வாளர் அந்தோனி சாவேஸ் போன்றோர் வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் மீண்டும் திரும்பவே இல்லை. இவர்கள் அனைவரும் அமெரிக்காவின் மிக முக்கிய ரகசியத் திட்டங்களில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லெவிட் கூறுகையில், "மாயமான வழக்குகளுக்கு இடையே ஏதேனும் பொதுவான தொடர்புகள் உள்ளதா? என்பது குறித்து விசாரணை முகமைகள் தீவிரமாக மதிப்பாய்வு செய்து வருகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.

இது தற்செயலாக நடந்த மரணங்களா? அல்லது அமெரிக்காவின் அறிவியல் வளர்ச்சியை முடக்க எதிரி நாடுகள் விரித்த வலையா? என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. முக்கிய விஞ்ஞானிகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது அமெரிக்க அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.