24 மணி நேரமும் வெந்நீர் வசதி.. தண்ணீர் ஏடிஎம்.. கேதார்நாத் பக்தர்களுக்கு புதிய திட்டத்தை அறிவித்த முதல்வர்..!
Webdunia Tamil April 19, 2026 01:48 PM

உத்தரகண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற கேதார்நாத் புனித பயணத்தை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு இனி 24 மணிநேரமும் வெந்நீர் வசதி வழங்கப்படவுள்ளது. அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இதற்கான புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.

இமயமலையின் உயரமான பகுதிகளில் உள்ள குளிரை சமாளிக்க, கைசர் வசதிகள் மூலம் இந்த வெந்நீர் விநியோகம் செய்யப்படும். இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த கைசர்கள் முழுக்க முழுக்க சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் இயங்கும்.

காடுகளில் தீ விபத்தை ஏற்படுத்தும் காய்ந்த பைன் ஊசிகள் மற்றும் கோவேறு கழுதைகளின் கழிவுகளை கொண்டு தயாரிக்கப்படும் 'பயோமாஸ் பெல்லட்டுகளை' எரிபொருளாக கொண்டு இந்த இயந்திரங்கள் செயல்படும். இது நாட்டின் இத்தகைய உயரமான மலைச்சந்நிதியில் செயல்படுத்தப்படும் முதல் முயற்சியாகும்.

மேலும், யாத்திரை பாதைகளில் ஆங்காங்கே தண்ணீர் ஏடிஎம்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாடு பெருமளவு குறைக்கப்படும்.

குப்பைகளை சரியாக மேலாண்மை செய்ய ட்ரோன் கண்காணிப்பு மற்றும் நவீன கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட உள்ளன. சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு சௌகரியமான பயண அனுபவத்தை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.