ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மீதான துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா-ஈரான் இடையிலான உறவு மிகவும் வலிமையானது என்று இந்தியாவில் உள்ள ஈரானிய உச்சத் தலைவரின் பிரதிநிதி டாக்டர் அப்துல் மஜீத் ஹக்கீம் இலாஹி தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
ஈரான் மற்றும் இந்தியா இடையிலான உறவு 5,000 ஆண்டுகால வரலாறு, கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தால் பிணைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், இரு நாடுகளுக்கு இடையிலான சுமூகமான உறவால் இந்தியா தனது எண்ணெய் தேவைகளை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தடையின்றி பெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் இடையிலான உரையாடல்கள் வெற்றிகரமாக அமைந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய பதற்றமான சூழல் குறித்து பேசிய அவர், ஈரான் போரை விரும்பவில்லை என்றும், அமைதியையே விரும்புவதாகவும் கூறினார். ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், விரைவில் அது திறக்கப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். அதே சமயம், அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை நீக்காத பட்சத்தில், ஜலசந்தி தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும், எவ்விதக் கப்பல்களும் அங்கிருந்து நகர வேண்டாம் என்றும் ஈரானிய புரட்சிகர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Edited by Siva