விடிய விடிய பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள்…! “கிளாம்பாக்கத்தில் பயணிகள் கடும் அவதி”… போக்குவரத்து அதிகாரிகள் பரபரப்பு விளக்கம்…!!!
SeithiSolai Tamil April 23, 2026 05:48 PM

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டிச் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்கக் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான பயணிகள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போதிய பேருந்துகள் இல்லை எனக் கூறி பயணிகள் சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென் மாவட்டங்களைச் சேர்ந்த சென்னை வாழ் மக்கள், தேர்தலில் வாக்களிக்க கடந்த இரண்டு நாட்களாகச் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர். ரயில்களில் இடம் இல்லாததாலும், ஆம்னி பேருந்துகளில் ரூ.3,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாலும், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அரசுப் பேருந்துகளை நாடி கிளாம்பாக்கத்தில் குவிந்தனர். நேற்று மாலை முதல் பயணிகள் கூட்டம் அலைமோதியதால் பேருந்து நிலையம் திக்குமுக்காடியது.

திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குப் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கான பயணிகள் விடிய விடியப் பேருந்து நிலையத்திலேயே காத்திருக்கும் அவலம் நேரிட்டது. பேருந்துகள் வந்தபோது மக்கள் முண்டியடித்து ஏறியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த பயணிகள் போக்குவரத்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் பேருந்து நிலையத்திற்குள்ளேயே அமர்ந்து பயணிகள் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் திடீரென “த.வெ.க” (தமிழக வெற்றிக் கழகம்) என முழக்கமிட்டதால் அரசியல் ரீதியாகப் பரபரப்பு தொற்றிக்கொண்டது. மேலும், அவர்கள் ஜி.எஸ்.டி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்திப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இன்று அதிகாலை 4 மணி வரை பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வண்டலூர் ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பயணிகள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மேலும் தேர்தலையொட்டிப் பொதுமக்கள் வசதிக்காக கடந்த 21-ஆம் தேதி முதல் இன்று காலை வரை மொத்தம் 10,169 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 6 லட்சத்து 27 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். வழக்கமான 2,580 பேருந்துகளுடன் 4,158 சிறப்புப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டுள்ளன. இன்று மதியம் 1 மணி வரை இந்தப் பேருந்து சேவை தொடரும் என்று கூறியுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.