
நடிகர் ரஜினி எப்படி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை தனது கட்சி நிர்வாகிகளாக நியமித்து அரசியலுக்கு வர ஆசைப்பட்டாரோ, நடிகர் விஜயகாந்த் எப்படி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அரசியலுக்கு கொண்டு வந்து சட்டசபை உறுப்பினராக மாற்றினாரோ, அப்படித்தான் விஜயும் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை தற்போது தனது அரசியல் கட்சியிலும் நிர்வாகிகளாக நியமித்திருக்கிறார்.
அதே நேரம் ரஜினி அரசியலுக்கு வரவில்லை.. விஜயகாந்த் அரசியலுக்கு வந்தார். ஆனால் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் 29 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவராகவும் மாறினார். தற்போது விஜய் வந்திருக்கிறார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 233 தொகுதிகளில் அவரின் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர்..
தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என விஜய் தொடர்ந்து சொல்லி வந்தார். அவர் பிரச்சாரத்திற்கு செல்லும் போது அவரை பார்க்க பெருமளவு கூட்டமும் கூடியது.. முதல் நிலை வாக்காளர்களும், நிறைய இளைஞர்களும் விஜய்க்கு வாக்களித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது. கண்டிப்பாக விஜய் தமிழக அரசியலில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். ஆட்சி அமைக்கும் அளவுக்கு இந்த தேர்தலில் வாக்குகளை பெற முடியாவிட்டாலும் கண்டிப்பாக எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் போகும்.. அதற்கு விஜய் காரணமாக இருப்பார் என்றெல்லாம் பலரும் சொல்கிறார்கள். அது நடக்குமா என்பது வருகிறதே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரிந்துவிடும்..
ஒருபக்கம் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விஜய் தொடர்ந்து பல கோவில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். ஒருபக்கம் தனது கட்சி நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனையும் நடத்தி வருகிறார். நேற்று அனைத்து தொகுதி வேட்பாளர்களிடமும் விஜய் காணொளி வழியாக ஆலோசனை செய்தார். அப்போது, வருகிற 4ம் தேதி அதிகாலை 6 மணிக்கே வாக்கு எண்ணும் இடத்திற்கு வந்துவிடவேண்டும்.. தேர்தலில் வெற்றி பெற்றவுடன் இரவு எந்த நேரமானாலும் பனையூருக்கு வந்துவிட வேண்டும்’ என்று விஜய் சொன்னதாக சொல்லப்படுகிறது..
அதேபோல் நிர்வாகிகளிடம் பேசியபோது ‘நான் உங்களுக்காக இருப்பேன்.. நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் என்னுடன் இருப்பீர்களா?’ என்று விஜய் கேட்டதாகவும் அதற்கு ‘நாங்கள் உங்களோடு இருப்போம்’ என நிர்வாகிகள் சொன்னதாகவும் செய்திகள் கசிந்தது. ஏனெனில் 233 வேட்பாளர்களில் 110 க்கும் மேற்பட்டவர் வேட்பாளர்கள் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக போன்ற மற்ற கட்சியிலிருந்து வந்தவர்கள்தான், கடைசி நேரத்தில் அந்த கட்சிகளில் சீட் கிடைக்கவில்லை என்பதால் தவெகவுக்கு வந்து வேட்பாளராக மாறியவர்கள். அவர்கள் வேட்பாளராக நியமிக்கப்பட்ட போதுதான் விஜய் அவர்களை பார்த்ததாக சொல்லப்படுகிறது.
ஒருவேளை தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்றால் அவர்களை மீண்டும் அவர்கள் வேறு கட்சிகளுக்கு ஆதரவளிக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் ஆட்சி அமைக்க எம்எல்ஏக்கள் இருக்கும் பேரம் கண்டிப்பாக நடக்கும் இந்த பயத்தால் தான் விஜய் அவர்களிடம் அந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார் என சொல்லப்படுகிறது..
ஒரு பக்கம் 233 தொகுதிகளில் வெறும் 40 வேட்பாளர்களுக்காக மட்டுமே விஜய் நேரில் சென்று பிரச்சாரம் செய்தார். இதனால் மற்ற தொகுதி வேட்பாளர்கள் விஜய் மீதும், கட்சியின் மீதும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை அவர்களில் சிலர் வெற்றி பெற்றால் பணத்திற்காக அவர்கள் மற்ற கட்சிக்கு தாவுவதற்கு வாய்ப்பிருக்கிறது..
எனவே, அவர்களெல்லாம் வெற்றி பெற்றால் பனையூருக்கு வருவார்களா என்பது முக்கியமான கேள்வியாக இருக்கிறது.. மே 4ம் தேதி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளரை கட்சியின் தலைமை நிர்வாகிகளால் தொடர்பு கொள்ள முடியாமல் போனால் கண்டிப்பாக அவர்கள் மற்ற கட்சிகளுடன் பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.
விஜய்க்கு முன் ஒரு பெரிய சவால் இருக்கிறது!..