ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, எதிர்வரும் மே 7-ஆம் தேதி அன்று இந்திய ஆயுதப்படையின் பெண் அதிகாரிகள் மீண்டும் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர்.
கடந்த 2025-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, எல்லை தாண்டி சென்று பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இந்த துல்லியமான தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இது அமைந்தது.
கடந்த ஆண்டு இந்த நடவடிக்கையை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு நாடு முழுவதும் பெரும் கவனத்தை பெற்றது. இராணுவத்தின் கர்னல் சோபியா குரேஷி, விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கடற்படையின் கமாண்டர் பிரேர்ணா தேவஸ்தாலி ஆகிய மூன்று பெண் அதிகாரிகள் இந்த தகவல்களை உலகுக்கு அறிவித்தனர்.
இது இந்திய ஆயுதப்படையில் வளர்ந்து வரும் பெண் சக்தி மற்றும் பெண்களின் தலைமைத்துவ பண்பை பறைசாற்றும் ஒரு வரலாற்று தருணமாக பார்க்கப்பட்டது.
மே 7-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தச் செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ஒருவரும் பங்கேற்க உள்ளார். இந்த சந்திப்பில் ஆபரேஷன் சிந்தூரின் முக்கியத்துவம், அதன் செயல்பாடுகள் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு உத்திகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராணுவத்தின் மிக முக்கியமான நடவடிக்கைகளில் பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு அமையவுள்ளது.
Edited by Siva