வைரல் வீடியோ... ட்ரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பே எச்சரித்த நாய்!
Dinamaalai May 02, 2026 12:48 AM

வாஷிங்டன் ஹில்டன் ஓட்டலில் நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் பங்கேற்றனர். வெள்ளை மாளிகை உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்த விழாவின்போது, எதிர்பாராத விதமாக மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக விரைந்து செயல்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள், மேடையில் இருந்த டிரம்ப் மற்றும் மெலானியா ஆகியோரை பாதுகாப்பாக வெளியேற்றினர். அங்கிருந்தவர்கள் மேஜைகளுக்கு அடியில் பதுங்கி உயிர் தப்பிய நிலையில், இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட நபர் கலிபோர்னியாவைச் சேர்ந்த 31 வயதுடைய கோலே தோமஸ் ஆலன் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவத்தின்போது பாதுகாப்புப் பணியில் இருந்த நாய், ஆலனின் வருகை குறித்து இரண்டு முறை எச்சரிக்கை செய்தும், அங்கிருந்த அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததே இந்த அசம்பாவிதத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ஒரு பெரிய துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த அந்த நபர், பாதுகாவலரைச் சுட்டுவிட்டு டிரம்ப் இருந்த பகுதிக்குள் நுழைய முயன்றபோது, அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி அவரை உயிருடன் பிடித்தனர்.

இது தொடர்பாக அமெரிக்க அரசு வழக்கறிஞர் ஜீனைன் பிர்ரோ வெளியிட்டுள்ள 5 நிமிட வீடியோவில், தாக்குதலுக்கு முன்பாக ஆலன் ஓட்டலைச் சுற்றித் திரியும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஜனாதிபதி டிரம்ப்பை படுகொலை செய்ய முயன்ற இந்தக் கடுமையான குற்றத்திற்காக ஆலன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவம் அமெரிக்காவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.