மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் உயர்நீதிமன்ற கிளையில், இரு சகோதரிகள் தங்கள் கணவன்மார்களை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ள விருப்பம் தெரிவித்த விசித்திரமான வழக்கு விசாரணைக்கு வந்தது. தட்டியா பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவியையும் மகளையும் தனது மைத்துனர் மாயாராம் கடத்திச் சென்றுவிட்டதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால், அந்தப் பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி, தான் கடத்தப்படவில்லை என்றும், தனது விருப்பப்படியே மாயாராமுடன் வாழ்ந்து வருவதாகவும், கணவரிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளதாகவும் கூறி அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தினார்.
இந்த வழக்கில் இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மாயாராமின் மனைவி (அந்தப் பெண்ணின் தங்கை) இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மாறாக, தனது அக்கா தன் கணவருடன் வாழ்வதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்றும், தான் தனது அக்காவின் கணவருடன் வாழ விரும்புவதாகவும் அவர் கூறினார்.
இருவரும் தாங்கள் தற்போதைய திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லை என்றும், பரஸ்பரம் துணையை மாற்றிக்கொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்க விரும்புவதாகவும் தெரிவித்தனர். இரு பெண்களும் மேஜர் என்பதால், இது கடத்தல் வழக்கு அல்ல, தனிப்பட்ட குடும்ப விஷயம் என்று கூறி நீதிமன்றம் இந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.