தமிழக முதல்வர் ஸ்டாலினை கலங்க வைத்த மரணம்..! அரசு குடும்பத்தைச் சேர்ந்த மீனா முத்தையா மரணத்திற்கு உருக்கமான இரங்கல்…!!!
SeithiSolai Tamil May 02, 2026 10:48 PM

செட்டிநாட்டு அரசர் குடும்பத்தைச் சேர்ந்தவரும், கல்வி மற்றும் கலைத்துறையில் அரும்பணியாற்றியவருமான குமார ராணி முனைவர் மீனா முத்தையா அவர்களின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

செட்டிநாட்டு அரசர் குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி முனைவர் மீனா முத்தையா அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். கலைச்சேவை, கல்விச் சேவை இரண்டையும் தமது வாழ்வின் இருபெரும் இலட்சியங்களாகக் கொண்டு வாழ்ந்த பெருமைக்குரியவர் அவர். மறைந்து வந்த பாரம்பரியத் தஞ்சாவூர்க் கலைக்குப் புத்துயிர் கொடுத்து, அதற்காகவே ‘குமார ராஜா முத்தையா கலை மற்றும் கைவினைக் கலைப் பள்ளி’யின் மூலம் பலருக்குப் பயிற்சியும் அளித்து வந்தார். கலைத்துறையில் அவர் ஆற்றிய இப்பணிகள் என்றென்றும் நன்றியுடன் நினைவுகூரப்படும்.

தனிப்பட்ட முறையிலும் எங்களது குடும்பத்துடன் அவர் மிகுந்த இனிய நட்புறவைப் பேணி வந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு எனது துணைவியாரின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு அவர் உரையாற்றியதை இந்த வேளையில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். திருமிகு மீனா முத்தையா அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவரது கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.