தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Dinamaalai May 07, 2026 08:48 AM

நாளை முதல் தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் பரவலாக அடுத்து வரும் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களிலும் 100 டிகிரி செல்சியஸைக் கடந்து வாட்டி வதைத்து வந்த கோடை வெயிலின் தாக்கம் தற்போது மெல்லக் குறைந்து வருகிறது.

'கத்திரி வெயில்' எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியிருந்தாலும், மாநிலத்தின் உட்புற மற்றும் கடலோர மாவட்டங்களில் பெய்து வரும் கோடை மழை காரணமாக வெப்பம் கணிசமாகக் குறைந்து மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. நேற்று பெரும்பாலான இடங்களில் வெயில் இயல்பை விடக் குறைவாகவே பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று மாலைக்குள் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, தமிழகத்தில் நாளை மே 8 ம் தேதி முதல் மே 11-ம் தேதி வரை நான்கு நாட்களுக்குக் கோடை மழை தீவிரமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தாழ்வுப் பகுதியின் நகர்வால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா பகுதிகள், தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள் எனத் தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்யக்கூடும் என 'டெல்டா வெதர்மேன்' ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். கோடை வெப்பத்தால் தவித்து வந்த தமிழக மக்களுக்கு இந்த மழை அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.