‘ஆட்சியை கலைத்த ஆளுநர் – டெல்லிக்கு சென்ற NTR’ இந்தியாவே அதிர்ந்த தருணம்..!
இராஜா சண்முகசுந்தரம் May 07, 2026 03:14 PM

ஆந்திராவின் மிகப்பெரிய திரைத்துறை ஸ்டாராக இருந்து NTR எனும் N.T ராமாராவ், 1983ஆம் ஆண்டு முதன்முறையாக தேர்தலை சந்தித்து அசைக்க முடியாத சக்தியாக இருந்த காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி, தெலுங்கு தேசம் கட்சியை ஆட்சி கட்டிலில் அமர்த்தினார். 1977ல் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் செய்ததை 1983ல் ஆந்திராவில் என்.டி.ஆர் செய்துக்காட்டினார்.

அப்போதும் ஆளுநர், இப்போதும் ஆளுநர்

அதன்பின்னர், ஒரு வருடம் கழித்து 1984ஆம் ஆண்டு என்.டி.ஆரின் தெலுங்கு தேசம் கட்சிக்கு பெரும்பான்மை இல்லையென கூறி அவரது ஆட்சியை தன்னிச்சையாக கலைத்தார் அப்போதைய ஆளுநர் ராம் லால். அந்த நேரத்தில் இருதய அறுவைச் சிகிச்சைக்காக என்.டி.ஆர் அமெரிக்காவில் இருந்தார். அந்த சூழலை பயன்படுத்தி, அந்த கட்சியை சேர்ந்த நந்தேல்ல பாஸ்கரராவ் தனக்குதான் கட்சி எம்.எல்.ஏக்களின் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்றும் தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று அதிருப்தி எம்.எல்.ஏக்களின் பட்டியலை ஆளுநரிடம் சமர்பித்ததையடுத்து, என்.டி.ஆர் ஆட்சி கலைக்கப்பட்டது.

உடனடியாக, பாஸ்கரராவிற்கு முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ராம் லால்.

அமெரிக்காவில் இருந்து பறந்து வந்த என்.டி.ஆர்

இதனையறிந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என்.டி.ஆர் அமெரிக்காவில் இருந்து உடனடியாக கிளம்பி இந்தியா வந்தார். மத்திய காங்கிரஸ் அரசின் அறிவுறுத்தலின்பேரில் ஆளுநர் செய்திருப்பது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என கடுமையாக விமர்சித்தார் என்.டி.ஆர். 

குடியரசுத் தலைவர் மாளிகையை முற்றுகையிட்டு என்.டி.ஆர்

இதனையடுத்து, ஆந்திராவில் இருந்து தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்களையெல்லாம் அழைத்துக்கொண்டு அதிரடியாக டெல்லி சென்ற என்.டி.ஆர், குடியரசுத் தலைவர் மாளிகை முன்னர் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார். அது இந்திய அளவில் மிகப்பெரிய பிரச்னையாக மாறியது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு என்.டி.ஆரின் இந்த போராட்டம் பெரிய கரும்புள்ளியாக மாறி தலைவலியை ஏற்படுத்தியது. பின்னர், குடியரசுத் தலைவரை சந்தித்த என்.டி.ஆர், பெரும்பான்மை இல்லையென்ற நிலை வந்தால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடவேண்டுமே தவிர, ஆட்சியை கலைக்கக் கூடாது என வலியுறுத்தி, தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலையும் குடியரசுத் தலைவரிடம் கொடுத்து, தன்னுடைய ஆட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்று விடாப்படியாக பேசியிருந்தார்.

இதனையடுத்து, என்.டி.ஆரின் வாதத்தையும் அவரது போராட்டம் பெரிய பிரசனையாக வெடித்ததையும் கருத்தில்கொண்ட குடியரசுத் தலைவர், என்.டி.ஆர் ஆட்சியே ஆந்திராவில் தொடரும் என்று அறிவித்தார் அதோடு, என்.டி.ஆரின் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சியை கலைத்த ராம் லாலையும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து குடியரசுத் தலைவர் திரும்ப பெற்றுக்கொண்டார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.