த்ரிஷ்யம் முதல் பாகம் வெளியாகி 2013ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா, ஆஷா சரத், எஸ்தர் அனில் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வெளியானது. அந்த பாகம் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், தமிழில் கமல்ஹாசன் பாபநாசம் என அந்த படத்தில் நடித்தார். தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிக் கண்டது.
அதன் 2ம் பாகமான த்ரிஷ்யம் 2 2022ம் ஆண்டு வெளியாகி மீண்டும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து நீதான்ப்பா டைரக்டர் என ஜீத்து ஜோசப்பை பாராட்ட வைத்தது. அதே மேஜிக்கை 2026ம் ஆண்டு மே 21ம் தேதி வெளியாகவுள்ள த்ரிஷ்யம் 3 படத்திலும் ஜீத்து ஜோசப் – மோகன்லால் கூட்டணி உருவாக்குமா என்கிற எதிர்பார்ப்பு எகிறி வந்த நிலையில், த்ரிஷ்யம் 3 டிரைலர் தற்போது வெளியானது.
சூர்யாவின் கருப்பு படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், இன்னமும் அந்த படத்தின் டிரைலரை ஆர்ஜே பாலாஜி வெளியிடாமல் ஏமாற்றி வருகிறார் என அவரது ரசிகர்கள் கடுப்பில் திட்டி வரும் நிலையில், அதற்கு அடுத்த வாரம் வெளியாகவுள்ள த்ரிஷ்யம் 3 திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.
த்ரிஷ்யம் படத்தின் கதை பலருக்கும் தெரிந்த ஒன்று தான். தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க வீட்டுக்கு வரும் இளைஞனை அம்மா மீனா அடித்துக் கொன்று விடுவார். தனது மனைவியையும் மகளையும் காப்பாற்ற ஜார்ஜ் குட்டி சினிமா படங்களால் ஈட்டிய அறிவு கொண்டு பிணத்தை டிஸ்போஸ் செய்து விடுவார்.
ஆனால், அந்த பக்கம் மகனின் அம்மா காவல் அதிகாரி என்பதால், எப்படியாவது தனது மகனின் கொலைக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க ஜார்ஜ் குட்டியும் அவரது குடும்பத்தையும் வேட்டையாட துடிப்பார். ஆனால், அதில் இருந்து 2 பாகங்களாக தப்பித்த ஜார்ஜ் குட்டி இந்த முறை மாட்டினாரா? இல்லையா? என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஜார்ஜ் குட்டிக்கு இந்த முறை யாரால் பிரச்னை வெடிக்கிறது. அதை எப்படி சமாளித்து தனது குடும்பத்தை காப்பாற்றப் போகிறார் என்பதை காணவே ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.