பணம் இல்லை என பேசாதீங்க.. திசைதிருப்பாதீங்க – முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து கேள்விகளை அடுக்கிய முக ஸ்டாலின்!
TV9 Tamil News May 10, 2026 05:48 PM

சென்னை, மே 10, 2026: தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். வாழ்த்துகளை தெரிவித்ததோடு, பல்வேறு கேள்விகளையும் அவர் முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேண்டும்:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.

எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை…

— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin)

பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீர்கள். அதெல்லாம் இருக்கிறது. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேண்டும்.

ஐந்து ஆண்டுகளாக கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும், ஒன்றிய பாஜக அரசின் ஓரவஞ்சனையையும் சமாளித்துத்தான் நாங்கள் எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.

‘ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு’ என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லியிருக்கிறீர்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.

கடந்த பட்ஜெட்டில் நிதிநிலை பற்றி தெளிவாக சொல்லப்பட்டது:

தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டிலேயே தெளிவாக நாங்கள் சொல்லிவிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதற்குப் பிறகுதானே நீங்கள் பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீர்கள்? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீர்கள்.

‘நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்’ எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள், இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும், எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!” என பதிவிட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.