தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!
Dhinasari Tamil May 10, 2026 01:48 AM

காங்கிரஸ், விசிக., இரு கம்யூனிஸ்ட்கள், முஸ்லிம் லீக் ஆகிய திமுக., கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில், பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏ.,க்களின் ஆதரவுக் கடிதங்கள் கிடைத்ததை அடுத்து, நாளை நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய் முதல்வராக பதவி ஏற்கவுள்ளார். 120 எம்எல்ஏ.,க்கள் ஆதரவுடன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஜோசப் விஜய்.

இதை அடுத்து, தமிழகத்தின் 18 வது முதலமைச்சராக பதவி ஏற்கிறார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான சி. ஜோசப் விஜய். நாளை காலை 10 மணிக்கு, நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.

தமிழக முதல்வராக நாளை காலை 10 மணிக்கு ஜோசப் விஜய் பதவியேற்கும் விழா, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இவ்விழாவில் ஜோசப் விஜயுடன் 9 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். 

4வது முறையாக ஆளுநரை சந்தித்த ஜோசப் விஜய்!

ஆட்சியமைப்பதற்குப் போதிய ஆதரவில்லாததால் திணறி வந்தது ஜோசப் விஜய்யின் த.வெ.க., இந் நிலையில், பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு, திருமாவளவனின் விசிக.,வும், முஸ்லிம் லீக்கும் ஆதரவு அளிப்பதாக அறிவித்ததை அடுத்து, ஜோசப் விஜய் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிக்கும் எம்எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்தது. 

இதை அடுத்து, மாலை 5 மணிக்கு 4வது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கோர ஜோசப் விஜய் திட்டமிட்டிருந்தார். இதற்காக பட்டினப்பாக்கத்தில் இருந்து விசிக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களுடன், ஆளுநர் அர்லேகரை சந்திக்க ஜோசப் விஜய் தன் பரிவாரங்களுடன் புறப்பட்டுச் சென்றனர்.

ஆனால் ஆளுனர் அர்லேகர் இன்று இரவு 7.10க்கு திருவனந்தபுரம் புறப்பட்டு செல்ல இருப்பதாகவும், அதனால் ஜோசப் விஜயை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்து, தனது கான்வாய் வாகனத்துடன் பாதியிலேயே காரை திருப்பிக் கொண்டு, மீண்டும் வீடு திரும்பினார்.  

இந்நிலையில், ஆளுநர் அர்லேக்கரின் கேரள பயணம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, மாலை 6.30க்கு ஜோசப் விஜய்க்கு நேரம் ஒதுக்கித் தரப்பட்டது. 

இதை அடுத்து மீண்டும் தன் ஆதரவாளர்கள் சூழ ஆளுநர் அர்லேகரை சந்தித்து கடிதங்களை ஒப்படைத்த ஜோசப் விஜய், ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார். அதன் அடிப்படையில் ஆளுநர் மாளிகை முதல்வர் நியமன உத்தரவை வெளியிட்டது. நாளை 10 – ஞாயிறு காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஜோசப் விஜய் உடன் அமைச்சர்கள் 9 பேர் பதவியேற்கின்றனர்.

பொது நிர்வாகம் காவல் மற்றும் உள்துறை – ஜோசப் விஜய்
நகராட்சி நிர்வாகம் – என் .ஆனந்த்
பொதுப்பணித்துறை செங்கோட்டையன்
விளையாட்டு மற்றும் மதுவிலக்கு துறை ஆதவ் அர்ஜுனா
பள்ளி கல்வித்துறை வெங்கட்ரமணன்
மின்சாரத்துறை சிடி நிர்மல் குமார்
ஆதி திராவிடர் நலத்துறை ராஜ்மோகன்
சிறுபான்மை நலத்துறை முஸ்தபா
பத்திரப்பதிவு வணிக துறை அருண் ராஜ்

ஜோசப் விஜய், பெரும்பான்மையை நிரூபிக்க 3 நாள் அவகாசம் அளித்துள்ளார் ஆளுநர் அர்லேகர். இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்! News First Appeared in Dhinasari Tamil

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.