வசமாக சிக்கிய மது கடத்தல் கும்பல் .... 190 பாட்டில்கள் பறிமுதல்!
Dinamaalai May 10, 2026 01:48 AM

தூத்துக்குடி மாவட்டம் புதூர் பகுதியில் மதுபானங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதூர் - சென்னம்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் மது விற்றுக்கொண்டிருந்த விளாத்திகுளத்தைச் சேர்ந்த 42 வயது அமீர்தராஜ் என்பவரை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். அவரிடமிருந்து 90 மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், சப்-இன்ஸ்பெக்டர் துரைச்சாமி தலைமையிலான மற்றொரு குழுவினர் காடல்குடி சாலை பகுதியில் சோதனை நடத்தினர். அங்கும் இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்ற விளாத்திகுளத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் முருகன் என்பவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து 95 மது பாட்டில்களும், ஒரு பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரே நாளில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்த அதிரடி வேட்டையில் மது கடத்தல் கும்பல் சிக்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் மொத்தம் 190 மதுபாட்டில்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்கள் எங்கிருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்தார்கள், இதன் பின்னணியில் பெரிய கும்பல் ஏதேனும் உள்ளதா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட காவல்துறை மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.