தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி ஒரே கட்டமாகத் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில், திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 04 முனைப் போட்டி நிலவியது. தவெக தனிப்பெரும் கட்சியாக 108 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்க முனைந்து வருகிறது. தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், விசிகவின் ஆதரவு தெரிவிக்குமா தெரிவிக்காதா என தமிழகமே எதிர்பார்த்து இருந்தது.
ஐயூஎம்எல் கட்சி நேற்று ஆதரவு வழங்க மறுத்த நிலையில் தற்போது ஆதரவு கடிதம் வழங்கி உள்ளது. அதேப்போன்று தவெக ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கடிதத்தை விசிக வழங்கியுள்ளது. விசிக வழங்கிய ஆதரவு கடிதத்தை ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களிடம் காண்பித்து விஜய் முதல்வரராக பதவியேற்பார் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து 120 எம்எல்ஏக்கள் ஆதரவு தவெகவிற்கு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கான 118 எம்எல்ஏக்கள் ஆதரவை தவெக பெற்றுள்ள நிலையில் ஆளுநரை சந்திக்க விஜய் நேரம் கேட்டுள்ளார். ஆனால், ஆளுநர் அலேக்கர் இன்று இரவு 07.10 மணிக்கு விமானம் மூலம் கேரளம் செல்கிறார். அதற்கு முன் ஆளுநரை சந்திக்க விஜய் நேரம் கேட்டுள்ளார்.
ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநர் அலேக்கரை 04-வது முறையாக நேரில் பார்க்க விஜய் பட்டினம்பாக்கத்தில் இல்லத்தில் இருந்து புறப்பட்டார். ஆனால், ஆளுநர் நேரம் ஒதுக்கவில்லை என கூறப்படுகின்ற நிலையில், விஜய் பாதியிலேயே வீடு திரும்பியுள்ளார்.
இந்த பரபரப்பான சூழலில், லீமா ரோஸ், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல எம்.எல்.ஏக்கள் சிவி சண்முகம் உடன் வீட்டில் தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி எந்த முடிவும் எடுக்காமல் இருந்ததால் தனி ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.