தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் இன்று தொடங்கியுள்ளது. 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில், லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
இந்தத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்ற பெரும்பான்மை இலக்கை எட்ட காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் ஆதரவைப் பெற்றுள்ளது.
இதன் மூலம் ஒரு வலுவான கூட்டணி ஆட்சியை விஜய் மலர செய்துள்ளார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், வரும் மே 13-ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்க்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, நாளை தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது. புதிய அரசின் முதல் கூட்டத்தொடரான இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும். தனது முதல் நாளிலேயே அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ள முதலமைச்சர் விஜய், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்த பிறகு, மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் சமூக நலன் சார்ந்த திட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்தத் தயாராகி வருகிறார்.
Edited by Siva