69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சமூகநீதி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்- விஜய்க்கு அன்புமணி கோரிக்கை
Top Tamil News May 10, 2026 04:48 PM

பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு திட்டங்களுக்கு வரவேற்கதக்கது. 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சமூகநீதிகணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் அவர்கள்,  பெண்களுக்கு எதிராக குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படை, போதைப்பொருள்கள் புழக்கத்தை ஒழிக்க காவல்துறையில் தனி அலகுகள்  ஆகியவற்றை அமைப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறார்.  தமிழ்நாட்டின் இன்றைய தலையாயத் தேவைகள்  பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், மாநிலம் முழுவதும் தலைவிரித்தாடும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை ஒழிக்க வேண்டியதும் தான். அவற்றுக்கு வகை செய்யும்  திட்டங்களை முதலமைச்சர் விஜய் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஒழிக்கப்பட வேண்டிய போதைப் பொருள்கள் கஞ்சா, அபின், ஹெராயின்  உள்ளிட்ட போதைப்பொருள்கள் மட்டுமல்ல...  அரசின் சார்பில் விற்பனை செய்யப்படும் மது வகைகளும் தான்.  மதுவால் தான் ஆண்டுக்கு 20 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன; லட்சக்கணக்கான குடும்பங்கள் தலைவர்களை இழந்து நடுத்தெருவுக்கு வருகின்றன. எனவே  டாஸ்மாக் மதுக்கடைகளையும் படிப்படியாக மூடி  தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழகத்தின் இன்றைய முக்கியத் தேவைகளில் இன்னொன்று சாதிவாரி சர்வே எனப்படும்  சமூகநீதி கணக்கெடுப்பை நடத்துவதாகும். சமூகநீதியில் தமிழகத்தை தனித்துவப்படுத்தி காட்டுவது 69% இட ஒதுக்கீடு தான்.  ஆனால், உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் கூட சாதிவாரி சர்வே எனப்படும் சமூகநீதிக் கணக்கெடுப்பு நடத்தப்படாததால், உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் காரணமாக, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதைத் தடுக்க  சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.ஆளும்  த.வெ.க.வின் தேர்தல் அறிக்கையின் முதல் வாக்குறுதியே,’’ ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய அளவில் விகிதாச்சார பிரதிநிதித்துவம்  கிடைப்பதே உண்மையான சமூகநீதி  என்பது த.வெ.க.வின் கொள்கை. இதை உறுதி செய்ய சாதிவாரி கணக்கீட்டு சர்வே மேற்கொள்ளப்படும்” என்பது தான். அந்த வகையில் சமூகநீதியைக் காப்பதில் ஆளும் த.வெ.க.வும் உடன்படுகிறது.எனவே,  இதற்கு செயல்வடிவம்  கொடுக்கும் வகையில்  தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி சர்வே எனப்படும் சமூகநீதி கணக்கெடுப்பை நடத்தவும்,  அதனடிப்படையில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பது,  உரிய அளவில்   அனைத்து சமூகங்களுக்கும்  விகிதாச்சார பிரதிநிதித்துவம் அளிப்பது  ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் புதிய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் கு்ிப்பிட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.