விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தன்னை முதலமைச்சராக்க முயற்சி நடந்ததாக வெளியான செய்திகள் குறித்துத் தனது எக்ஸ் தளத்தில் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். "தமிழ்நாட்டில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் ஆகும் அளவுக்குத் தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை என்பது அனைவரும் அறிந்த கசப்பான உண்மை" என்று அவர் மிகுந்த வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த வெளிப்படையான பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களின் கேள்விக்குத் தான் அளித்த பதிலைச் சில ஊடகங்கள் உள்நோக்கத்துடன் திரித்துக் கூறுவதாகத் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். "தங்களை முதலமைச்சராக்க நடந்த முயற்சியைக் காங்கிரஸ் முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்களே" என்ற கேள்விக்கு, "அப்படியொரு முயற்சி நடந்ததாக எனக்கும் தகவல் கிடைத்தது" என்று மட்டுமே தான் கூறியதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். திமுகவோ அல்லது அதிமுகவோ அதிகாரப்பூர்வமாகத் தன்னை அணுகவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்தியாவின் பிற மாநிலங்களான உத்தரப்பிரதேசம், ஆந்திரா, பீகார் மற்றும் பஞ்சாப் ஆகியவற்றில் தலித்துகள் முதலமைச்சர்களாக இருந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் இது இன்னும் நூறாண்டானாலும் கனவாகவே இருக்கும் என்பதைத் தான் அறிவதாகவும் கூறியுள்ளார். ஒரு கருத்தைப் பிறிதொரு பொருள்படும்படி தலைப்பிட்டுச் செய்திகளைப் பரப்புவது ஊடக அறமல்ல என்று அவர் சாடியுள்ளார். திருமாவளவனின் இந்த எதார்த்தமான பதிவு சமூக வலைதளங்களில் ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகளைப் பெற்று வருகிறது.