"எங்க போறோம்னு அந்த புள்ள கேட்டும்..." - கோவை சிறுமி படுகொலையில் கைதான கார்த்திக் அளித்த நெஞ்சை பதறவைக்கும் வாக்குமூலம்!
Top Tamil News May 25, 2026 09:48 AM

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

காவல் துறையினரின் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர்தான் சிறுமியைக் கடத்திக் கொலைச் செய்தார் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, கார்த்திக்கைப் பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

கார்த்திக்கை அடையாளம் கண்ட காவல்துறையினர், அவரைப் பிடிக்கச் சென்றபோது சுவர் ஏறி தப்ப முயன்றுள்ளார். அப்போது கார்த்திக் கீழே விழுந்ததில் வலதுக்கால் மற்றும் கையில் முறிவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவரைச் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த மோகன்ராஜ் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் அரசு மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வரும் கார்த்திக்கிடம் கொலை செய்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது கார்த்திக் அளித்த வாக்குமூலத்தில், சிறுமிக்கு அடிக்கடி சாக்லெட் வாங்கி கொடுப்பது வழக்கம். 21ஆம் தேதி மாலை 5 மணியளவில் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்துவிட்டு கண்ணம்பாளையம் குளக்கரைக்கு அழைத்து சென்றேன். எங்கு செல்கிறீர்கள் என சிறுமி கேட்டும் சொல்லவில்லை.

சூலூர் அருகே கடைக்கு முன்பு எனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, அந்த சிறுமியை அங்கேயே நிற்க சொல்லிவிட்டு, சாக்லெட் மற்றும் திண்பண்டங்களை வாங்கிக் கொடுத்தேன். பின்னர்,அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். நண்பர் மோகன்ராஜ் பார்த்து எங்கே செல்கிறாய் எனக் கேட்டபோது, சிறுமி சாக்லெட் கேட்டார். எனவே அதை வாங்கி கொடுத்தேன் என கூறிவிட்டு சென்றேன்.

பின்னர் வீட்டுக்கு செல்லாமல் கண்ணம்பாளையம் குளக்கரையில் சென்று கொண்டு இருந்தேன். உடனே அந்த சிறுமி ஏன் இங்கு செல்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு எதுவும் சொல்லாமல், குளக்கரையில் சென்று கொண்டு இருந்தேன். பின்னர் அங்குள்ள தென்னந்தோப்பு இருக்கும் இடத்துக்கு சென்றதும், இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சிறுமியை அங்கு அழைத்துச் சென்றேன்.

சிறுமியை வன்கொடுமை செய்தபோது சிறுமி கத்தினார். சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியபோதும், அந்த சிறுமி தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தார். இதனால் அலறல் சத்தம் கேட்டு யாரும் வந்து விடுவார்கள் என்று பயந்து சிறுமியின் கழுத்தை நெரித்தேன். அதில் அவர் உயிரிழந்துவிட்டார். உடலை அந்த குளக்கரையை ஒட்டியுள்ள முட்புதரில் வீசிவிட்டு சென்றுவிட்டேன். அப்போது மோகன்ராஜ் வந்தார். அவரிடம் சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்ததைக் கூறினேன் ஆனால் அவர் காவல் துறையினரிடம் தெரிவிக்கவில்லை.

காவல் துறையினர் மற்றும் உறவினர்கள் தேடும்போதும், தனது நண்பனை காட்டிக்கொடுக்காமல் அவர்களுடன் சேர்ந்து மோகன்ராஜும் சிறுமியை தேடினான். ஆனால் காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு எங்களை பிடித்து விட்டனர்" எனத் தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.