நீங்க சொன்னா கரெக்ட்..! எடப்பாடி போட்ட ரூல்ஸ், ஒகே சொல்லி ஐக்கியமாகும் வேலுமணி டீம்? யார் அவுட்?
குலசேகரன் முனிரத்தினம் May 25, 2026 10:44 AM

ADMK EPS SP Velumani: எஸ்.பி. வேலுமணி அணியை அதிமுகவில் இணைத்தாலும், குறிப்பிட்ட சிலருக்கு மீண்டும் கட்சியில் இடமில்லை என எடப்பாடி பழனிசாமி உறுதியாக தெரிவித்துள்ளாராம்.

தேர்தலுக்குப் பின் பிளவுபட்ட அதிமுக:

சட்டமன்ற தேர்தல் முடிவுகளில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. எதிர்க்கட்சி அந்தந்தை மட்டுமின்றி பல இடங்களில் டெபாசிட் இழந்தது கட்சி நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் முறையான கூட்டணி அமைக்காதது, சரியான வேட்பாளர்களை டேர்வு செய்யாதது, தேர்தல் தோல்வி ஆகியவற்றிற்கு பொறுப்பேற்று, எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என போர்க்கொடி தூக்கியது. இதில் முன்னாள் அமைச்சர்களான சி.வி. சண்முகம், எஸ்.பி, வேலுமணி, தங்கமணி, சி. விஜயபாஸ்கர் மற்றும் காமரான் என பல முக்கிய பிரமுகர்களும் இடம்பெற்று இருந்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், சி.வி. சண்முகம் தலைமையிலான அணிக்கும் கடும் வார்த்தை மோதல் வெடித்தது.

மாறி மாறி குற்றச்சாட்டுகள்:

செய்தியாளர் சந்திப்பில் பேசிய சி.வி. சண்முகம், “எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தொடர்ந்து தோல்விகளை மட்டுமே கண்டு வருகிறது. அரவணைத்து செல்லும் பழக்கம் இன்றி மிகவும் ஆணவமாக நடந்து கொள்கிறார். பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைத்து இருந்தால் கட்சி இன்று இந்த மோசமான நிலையை எட்டி இருக்காது. பரம எதிரியான திமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க முயன்றார்” என பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் பலரும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டனர். கூட்டணி ஆட்சி அமைத்துள்ள தவெகவின் அமைச்சரவையில் பங்குபெற்று ஆட்சி அதிகாரத்தை சுவைப்பதற்காகவே சிலர் அதிமுகவிற்கு துரோகம் செய்வதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு குற்றம்சாட்டியது. இதனால் கட்சி கிட்டத்தட்ட இரண்டாக உடைந்தே விட்டது என தொண்டர்கள் கவலையில் உறைந்தனர்.

அமைச்சரவையில் வாய்ப்பில்லை:

அதிமுக இரு அணிகளாக பிரிந்த நிலையில், சி.வி. சண்முகம் அணியை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்த்தது பெரும் பேசுபொருளானது. இதையடுத்து அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது விஜய் தலைமையிலான அரசுக்கு எதிராக அதிமுக வாக்களிக்கும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதனை புறந்தள்ளி, 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தவெக அமைச்சரவையில் அங்கம் வகிக்க உள்ளது உறுதியாகியுள்ளது என பல்வேறு தரப்பினரும் ஆருடம் தெரிவித்தனர். திமுக எதிர்ப்பு என்ற காரணத்திற்காகவே தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக பேசிய எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு 5 முதல் 8 அமைச்சர் பதவி வரை சி.வி. சண்முகம் அணிக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பேசப்பட்டது. ஆனால், அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் அத்தகைய நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை. பல்வேறு சட்ட சிக்கல்களை கருத்தில் கொண்டு, மதச்சார்பற்ற கூட்டண்ணி என தற்போது கிடைத்துள்ள ஆதரவையும் தக்கவைத்துக் கொள்வதற்காகவே, அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களை தவெக தரப்பு அமைச்சரவையில் சேர்க்கவில்லையாம்.

இதையும் படியுங்கள்: Petrol Diesel Price: 2 வாரங்களில் 4வது முறை - பெட்ரோல் விலை ரூ.2.46, டீசல் விலை ரூ.2.57 உயர்த்தி அறிவிப்பு

அந்தர் பல்டி அடித்த எஸ்.பி.வேலுமணி

அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான கேள்விகளுக்கு, “நாங்கள் எப்போது அமைச்சரவையில் இடம் கேட்டோம். எப்போதும் அதிமுகவின் பொதுச்செயலாளர் எங்கள் அண்ணன் எடப்பாடி பழனிசாமி தான். எங்களுக்குள் ஏற்பட்டது கருத்து வேறுபாடு தானே தவிர பிளவு அல்ல” என எஸ்.பி.வேலுமணி விளக்கமளித்தார். அண்மையில் சூலூரில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் விஜய் தலைமையிலான அரசுக்கு கண்டனமும் தெரிவித்தார். இதனால் அமைச்சரவையில் வாய்ப்பில்லாத நிலையில், அரசியல் எதிர்காலத்தையும் தொலைக்க வேண்டாம் என எஸ்.பி.வேலுமணி தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாக பல்வேறு தரப்பினரும் பேசினர்.

எடப்பாடி பழனிசாமி கொடுத்த வாக்குறுதிகள்:

இதனிடையே, எஸ்.பி. வேலுமணி முன்னெடுத்த சமாதான பேச்சுவார்த்தையை ஏற்ற எடப்பாடி பழனிசாமி, ”பிரிந்து சென்றவர்கள் வந்தால் சேர்த்து கொள் வோம். பொதுக்குழுவை கூட்ட வலியுறுத்தக்கூடாது. பொதுச்செயலாளருக்கு எதிராக கலகம் செய் வதை கைவிட வேண்டும். பதவி பறிக்கப்பட்டவர் களுக்கு மீண்டும் அதே மாவட்ட செயலாளர்கள் பதவி வழங்கப்படும். ஒரு சிலருக்கு மட்டும் மீண்டும் பதவி வழங்கப்படாது. தேவை ஏற்படும்போது மட்டுமே பொதுக்குழு கூட்டப்படும். தோல்வி குறித்து ஆராய குழு அமைக்கப்படும். கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என பல நிபந்தனை விதித்தாராம். அதை எஸ்.பி. வேலுமணி தரப்பு எந்த எதிர்ப்பும் இன்றி ஏற்றுக்கொண்டுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று எடப்பாடியுடன் சந்திப்பு

இந்நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பு இன்று சென்னையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாம். அதன் முடிவில் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் கீழ் கட்சியில் செயல்படுவது என்ற முடிவு அறிவிக்கப்பட உள்ளதாம். அதேநேரம், செய்தியாளர் சந்திப்பில் கட்சி தலைமையை கடுமையாக விமர்சித்த சி. வி. சண்முகம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் சிலருக்கு கட்சியில் மீண்டும் முக்கியத்துவம் கொடுக்க முடியாது என எடப்பாடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளாராம்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.