தமிழகத்தில் விஜய் தலைமையிலான த.வெ.க கூட்டணி ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, தி.மு.க மற்றும் காங்கிரஸ் இடையே அரசியல் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
இதனால் அதிருப்தியடைந்த தி.மு.க-வினர் இக்கூட்டணிக் கட்சிகளைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, “இனி காங்கிரஸைக் கிட்டவே சேர்க்கக் கூடாது” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக வெளியான செய்திக்குக் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தோல்விக்குக் காரணம் காங்கிரஸ் என்று தி.மு.க கூறுவது வழக்கமான ஒன்றுதான் என்றும், இதன் மூலம் உதயநிதியின் வன்மமே வெளிப்பட்டுள்ளது என்றும் அவர் சாடியுள்ளார்.
மேலும், பா.ஜ.க தமிழகத்திற்குள் வந்துவிடக் கூடாது என்பதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள மாணிக்கம் தாகூர், தமிழகத்தில் நேர்மையான ஆட்சியைக் கொடுக்க முதலமைச்சர் விஜய் முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் பாராட்டியுள்ளார்.
இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுடன் அமர மறுக்கும் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் விரைவில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்கப் போவதாக அவர் அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தி.மு.க எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பா.ஜ.க-விற்கு ஆதரவளிக்கத் தொடங்குவார்கள் என்றும், தமிழகத்தில் நடக்கும் இந்த அரசியல் மாற்றங்கள் மற்றும் நகர்வுகள் அனைத்திற்கும் உதயநிதி ஸ்டாலின் தான் முழு முதற்காரணம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.