கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூலூர் பகுதியைச் சேர்ந்த அச்சிறுமி காணாமல் போன நிலையில், குளக்கரையில் அவரது சடலம் மீட்கப்பட்டது; சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதோடு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
அதேநேரம், பெற்ற தாய்க்குத் தெரியாமல் குழந்தையின் உடல் எரியூட்டப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழலில், பாஜக மூத்த தலைவர் எச். ராஜா இந்த விவகாரத்தில் முதலமைச்சரை விமர்சித்துள்ளார்.
தவெக தொடங்கிய போது பரந்தூர் நிலப் பிரச்சினைக்கு விரைந்து சென்று குரல் கொடுத்த ஜோசப் விஜய், தமிழக முதல்வரான பிறகு கோவையில் நடந்துள்ள பெண் குழந்தை படுகொலைக்கு அமைதி காப்பது வருத்தமளிப்பதாக அவர் சாடியுள்ளார்.
மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து நிறுத்த குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்குவதுடன், மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்தை அறவே ஒழிக்கத் தமிழக அரசும் காவல் துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.