நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தமிழகத்தின் 12-வது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் ஜோசப் விஜய் அவர்களின் அதிகாரப்பூர்வ அலுவல் புகைப்படம் (Official Portrait) வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சராகப் கடந்த 10-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டது முதல், பல்வேறு நிர்வாக ரீதியிலான அதிரடி நடவடிக்கைகளை முதலமைச்சர் விஜய் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தற்போது அவரது அதிகாரப்பூர்வ அரசுப் புகைப்படம் முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இனிவரும் நாட்களில் தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்கள், தலைமைச் செயலகத் துறைகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs), தன்னாட்சி அமைப்புகள் மற்றும் உள்ளாட்சி அரசு கட்டிடங்கள், அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் அரசு விளம்பரங்கள், ஆகிய அனைத்திலும் பயன்படுத்துவதற்காக இந்தத் தனித்துவமான புகைப்படம் டி.ஐ.பி.ஆர் (DIPR) எனப்படும் செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான அரசியல் தலைவர்களின் பாரம்பரிய தோற்றத்திலிருந்து மாறுபட்டு, முதலமைச்சர் விஜய் தனது பதவியேற்பு விழாவின் போது அணிந்திருந்த கம்பீரமான கறுப்பு நிற பிளேசர் மற்றும் வெள்ளைச் சட்டை அணிந்த பக்கா ‘எக்சிகியூட்டிவ்’ தோற்றத்திலான புகைப்படம், புதிய மாற்றத்தின் அடையாளமாக அரசு அலுவலகங்களை அலங்கரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அலுவல் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களிலும் வெளியாகி அவரது ஆதரவாளர்களிடையே வைரலாகி வருகிறது.