8 முடியவே முடியாது.. 5 அமைச்சர் தான்.! அதிமுக மாஜிக்களிடம் லிஸ்ட் கேட்ட முதலமைச்சர் விஜய்
கு. அஜ்மல்கான் May 15, 2026 06:44 PM

தவெகவிற்கு கை கொடுத்த திமுக கூட்டணி கட்சி

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக வீழ்த்தப்பட்டு நடிகர் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றிப்பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்காத நிலையில் முதல் ஆளாக திமுகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு தவெகவிற்கு பல்டி அடித்துள்ளது காங்கிரஸ், அடுத்தாக கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. அதே நேரம் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எஸ்.பி.வேலுமணி. சி.வி.சண்முகம் தலைமையிலான அணியை சேர்ந்த 25 அதிமுக எம்எல்ஏக்கள் எடுத்துள்ளனர். ஆனால் இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

25 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்யுங்க

சட்டமன்றத்தில் நடைபெற்ற தவெக அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி உத்தரவிற்கு எதிராக தவெகவிற்கு ஆதரவாக இந்த 25 எம்எல்ஏக்களும் வாக்களித்தனர். இதனால் கடும் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி, 25 எம்எல்ஏக்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவியில் இருந்து நீக்க சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ளனர். மேலும் கட்சி பொறுப்புகளில் இருந்தும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளையும் கட்சியில் இருந்தும் அதிரடியாக நீக்கினார்.  இந்த பரபரப்பான சூழ்நிலையில்  தமிழ்நாடு முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் தற்போது முதல் கட்டமாக 9 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இன்னும் யாருக்கும் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. 

8 அமைச்சர் பதவி வேண்டும்

இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு வேலுமணி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இந்த அணிக்கு அமைச்சரவையில் இடம் தருவதற்கு முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி  அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் 5 பேருக்கு அமைச்சர் பதவி வழங்க தீர்மானித்துள்ளார். ஆனால் எஸ்.பி.வேலுமணி தரப்போ 8 அமைச்சர்கள் வேண்டும் என விடாப்பிடியாக இருந்துள்ளது. ஆனால் விஜய் தரப்போ இளம் அமைச்சரவையை உருவாக்கும் நோக்கில் 5 பேருக்கு மட்டுமே அமைச்சரவை வழங்கப்படும் என்று விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.  

இது மட்டுமில்லாம்  அமைச்சரவையில் யாருக்கு  என்னென்ன போர்ட் போலியோ தருவது என்றும் விஜயை தீர்மானிப்பார் என்று தெரிகிறது. எனவே மற்ற அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு வாரியம் உள்ளிட்ட வேறு பதவிகளை வழங்குவதாகவும் விஜய் வாக்குறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

5 அமைச்சரவை தான் 

இன்னும் ஒரு சில நாட்களில் தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் அதில் அதிமுக எம்எல்ஏக்களும் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. இந்த அமைச்சரவையில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், வீரமணி, அன்பழகன் உள்ளிட்டவர்களுக்கு இடம் கிடைக்கும் என தவெக வட்டார தகவலாக உள்ளது.

அதேபோன்று காங்கிரஸ் கட்சியில் ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர்களுக்கு அமைச்சரவை இடம்பெறுவார்கள். இந்த அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பிறகு தான் ஒட்டுமொத்தமாக எந்த எந்த அமைச்சர்களுக்கு எந்த துறையென முதலமைச்சர் விஜய் அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.