முதல்வர் விஜய் தீவிர முருக பக்தர் என்றும் நடந்தேபோய் அவருக்காக மொட்டை அடித்தேன் என்றும் ராதன் பண்டிட் வெற்றிவேல் பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதல் முறையாக தவெக தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். இவர் பதவி ஏற்றபிறகு முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அலுவலராக தவெக செய்தித் தொடர்பாளர் ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்பட்டார்.
இதற்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், நியமனம் திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலையில் ராதன் பண்டிட் அண்மையில் தனியார் ஊடகத்துக்குப் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் முதல்வர் விஜய் குறித்தும் தன்னுடைய தொழில் பற்றியும் தவெக குறித்தும் விரிவாகப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
’’இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம் என எல்லா மதத்தையும் சமமாக மதிப்பவர் முதல்வர் விஜய். அவர் கடவுள் முருகனின் தீவிர பக்தர். அவர் முதலமைச்சர் ஆனதற்குத்தான் மொட்டை அடித்துக் கொண்டேன். வீட்டில் இர்ந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரம், சுமார் 8 மணி நேரம் நடந்தே பழனிக்குச் சென்று மொட்டை போட்டேன். முதல்வராக விஜய் பதவியேற்றுக் கொண்டால் மொட்டை அடிப்பதாக வேண்டி இருந்தேன்.
விஜய் மீது அன்பாக இருப்பதால் கடந்த காலங்களில் ஏராளமான மிரட்டல்கள் வந்திருக்கின்றன. அடையாறில் ஓர் ஓட்டலில் தங்கி இருந்தபோது உதவி ஆய்வாளர் என்னை மிரட்டினார். தலைவர் விஜய்க்கு போன் போட்டு அழைத்துப் பேசினேன். நிர்மல் குமார் உதவியுடன் 30, 40 வழக்கறிஞர்கள் சம்பவ இடத்துக்கே வந்து என்னைக் காப்பாற்றினார்கள்.
முதல்வர் விஜய்க்கும் எனக்குமான அன்பு என்பது, எனக்கும் முருகனுக்குமான பந்தம். என்னை, அவரின் அரசியல் பிரிவு அலுவலராக நியமித்தது ஆரம்பத்தில் தெரியாது. அதில் மகிழ்ச்சிதான் என்றாலும், அதை நீக்கியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
எனக்கும் அவருக்குமான பந்தம் என்பது தந்தை – மகன் போல. அவர் என்ன செய்தாலும் எனக்கு கோபம் வராது.
நான் வெறும் ஜோசியக்காரன் கிடையாது. நிம்மதி கொடுப்பவன். பல்வேறு தலைவர்கள் மன நெகிழ்ச்சியோ புத்துணர்ச்சியோ தேவைப்பட்டால் என்னிடம் பேசுவார்கள். அப்படித்தான் விஜயும் வந்தார்.
விஜய்க்கும் எனக்குமான அன்பு ஒரே வேவ் லென்த்தில் இருக்கும். ஒருவர் ஒரு வேலையை 10 ஆண்டுகள் செய்தால், அதில் வல்லுநர் ஆகிவிடுவார் என்பார்கள். 42 வருடங்களாக நான் ஜோதிடம் பார்த்து வருகிறேன். யாருமே கண்ணை மூடிக்கொண்டு ஒரு தொழிலை விமர்சிக்கக் கூடாது.
இவ்வாறு ராதன் பண்டிட் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.