“ஹார்முஸ் முழுக்க என் கன்ட்ரோல்ல இருக்கு, ஈரான் அணு ஆயுதம் செய்ய விட மாட்டேன்“ - ட்ரம்ப் சூளுரை
ஸ்ரீராம் ஆராவமுதன் May 22, 2026 09:44 PM

கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கான உலகின் முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை, ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி முற்றுகையிட்டதால், உலக அளவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி தங்களது முழு கட்டுப்பாட்டிலேயே உள்ளதாகவும், ஈரான் அணு ஆயுதத்தை பெறாது என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அது குறித்து இப்போது பார்க்கலாம்.

ட்ரம்ப் கூறியது என்ன.?

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப், தங்களது கடற்படை முற்றுகையின் மூலம், ஹார்முஸ் ஜலசந்தியின் மீது முழுமையான கட்டுப்பாடு உள்ளதாக கூறியுள்ளார். மேலும், ஈரான் வசம் உள்ள அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை அமெரிக்கா மீட்கும் என்றும், அணு ஆயுத தயாரிப்பை மேற்கொள்ள வேண்டாம் என டெஹ்ரானை எச்சரித்துள்ளதாகவும், அப்படி இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

அதோடு, சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் நிலத்தடியில் மறைத்து வைத்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் நம்பும் ஆயுதத் தரத்திற்கு நெருக்கமான அணுப் பொருட்களை வைத்திருப்பதை அமெரிக்கா அனுமதிக்காது என்றும் ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.

மேலும், “நாங்கள் அதை பெறுவோம். அது எங்களுக்குத் தேவையில்லை. நாங்கள் அதை விரும்பவும் இல்லை. அதை பெற்ற பிறகு, நாங்கள் அதை நேகமாக அழித்துவிடுவோம். ஆனால், அதை அவர்கள் எடுத்துக் கொள்ள நாங்கள் அனுமதிக்க மாட்டோம்“ என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

“ஹார்முஸ் முற்றுகை 100% பலனளித்தது“

ஈரானிடமிருந்து யுரேனியத்தை பெறும் முயற்சியில் தொடங்கப்பட்ட போரில், ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை 100 சதவீதம் பலனளித்ததாக கூறியுள்ள ட்ரம்ப், முக்கியத்தவம் வாய்ந்த வழித்தடத்தில் கப்பல்கள் சுதந்திரமாக செல்வதை தடுக்கும் ஒரு ‘எஃகு சுவர்‘ என்று தங்கள் முற்றுயையைப் பற்றி கூறியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தி, சர்வதேச கப்பல் போக்குவரத்திற்காக திறந்திருக்க வேண்டும் என்றும், அது தடையின்றி இருக்க வேண்டும் எனவும் விரும்புவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், சுங்கக் கட்டணங்கள் வேண்டாம் என்றும், அது ஒரு சர்வதேச நீர்வழிப்பாதை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிடம் எவ்வளவு செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்ளது.?

தற்போது, ஈரானிடம் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் சுமார் 900 பவுண்டுகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த யுரேனியம் மேலும் சுத்திகரிக்கப்பட்டால், அது ஆயுதம் தயாரிக்க போதுமானதாக கருதப்படுகிறது.

அதனால் தான், அதை ஈரானிடமிருந்து மீட்கவோ அல்லது செயலிழக்கச் செய்யவோ வேண்டும் என்ற அடிப்படையில், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை ஒருபுறமும், ராஜதந்திர முறையில் பேச்சுவார்த்தைகள் மறுபுறமும் நடைபெற்று வருகின்றன.

மொஜ்தபாவின் உத்தரவால் பதற்றம்

இத்தகைய சூழலில், அதாவது, ஈரானிடமிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பெறுவதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிகவும் உறுதியாக இருக்கும் நிலையில், தங்கள் நாட்டிலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு வெளியேறக் கூடாது என்று ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உத்தரவிட்டிருப்பது, மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

ஏனென்றால், ஏற்கனவே தாக்குதலை தொடங்கலாமா என்ற எண்ணத்தில் இருக்கும் ட்ரம்ப்பிற்கு இது மேலும் கோபத்தை அதிகரிக்கும் என்பதாலேயே பதற்றம் அதிகரித்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.