அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், இரண்டு பிட் புல் நாய்களால் தாக்கப்பட்ட ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள தி நியூயார்க் போஸ்ட் நாளிதழ், நாய் பிரச்னை அப்பகுதி மக்களால் நீண்ட காலமாக இருந்துவரும் பாதுகாப்பு குறித்த கவலையை மேலும் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. அதாவது 50 வயதான ஜோடி கோவன் என்ற பெண் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்துள்ளது. அதாவது ஜோடி கோவன் தனது கணவர் டோனல் ஸ்மித் உடன் பிரெவர்ட் கவுண்டியில் வசித்து வருகிறார். சம்பவம் நடந்த நாளில் ஜோடி கோவன் பக்கத்து வீட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக தனது வீட்டை விட்டு சென்றுள்ளார். வீட்டில் கணவர் டோனல் ஸ்மித் இருந்து தனது வழக்கமான பணிகளை கவனித்துள்ளார்.
இதனிடையே திடீரென வெளியே ஜோடி கோவனின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த டோனல் என்ன ஆனது என வெளியே வந்து பார்த்தபோது அவர் சாலையோரத்தில் படுகாயங்களுடன் மயங்கி கிடப்பதைக் கண்டுள்ளார். அவரின் அருகில் இருந்து பிட்புல் நாய்கல் இருப்பதைக் கண்டார்.
உடனடியாக அவசர சேவைகளுக்கு போன் செய்து வரவழைத்த பின்னர் நாய்களிடமிருந்து ஜோடி கோவன் மீட்கப்பட்டார். உடனடியாக ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அதற்குள் ஜோடி கோவன் உயிரிழந்தார். அவர் நாய்களால் ஏற்படுத்திய கடுமையான காயத்தால் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பேசிய டோனல் ஸ்மித், “இரண்டு நாய்கள் என் மனைவியை சாலை வழியே ஓரமாக நின்றிருந்த லாரிக்கு முன்னாள் இருந்த புதர் பகுதிக்கு இழுத்து செல்வதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். அது மிகவும் கொடூரமானது. நான் 25,30 ஆண்டுகளாக அதிகம் நேசித்த பெண், இரு நாய்களால் துண்டு துண்டாகக் கிழிக்கப்பட்டதைப் பார்த்த காட்சியை என் மனதிலிருந்து என்னால் ஒருபோதும் அகற்ற முடியாது என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், என் மனைவி அந்த நாய்கள் கடந்த காலங்களில் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாகவும், அப்பகுதியில் அடிக்கடி சுதந்திரமாக சுற்றித் திரிவதாகவும் கூறி வந்தார். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக விலங்கு நல அதிகாரிகளிடம் புகார்கள் அளித்திருந்தனர். ஆனால் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் ஜோடி கோவன் தனது நாயுடன் வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதனால் பிட்புல் நாய்களிடம் இருந்து தனது நாயை காக்கும் போராட்டத்தில் அவர் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. சம்பந்தப்பட்ட இரண்டு நாய்களும் விலங்குகள் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைதுச் செய்யப்படவில்லை என்றும், விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது.