ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் உயிர்க்கொல்லி நோயை ஏற்படுத்தும் எபோலா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் வழியாக பயணம் செய்தவர்கள், அமெரிக்காவின் க்ரீன் கார்டு வைத்திருந்தாலும், அந்நாட்டிற்குள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
எபோலா வைரஸ் நோய் என்பது ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் ஒரு அரிய, அதே சமயம் மிகவும் ஆபத்தான ஒரு நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம் அல்லது உடல் திரவங்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது.
தற்போது இந்த நோய் ஆப்பிரிக்க நாடுகளில், குறிப்பாக காங்கோ, உகாண்டா. தெற்கு சூடான் போன்ற நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால், உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எபோலா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, கடந்த 21 நாட்களுக்குள், காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா, தெற்கு சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்று திரும்பி வரும் அமெரிக்காவின் சட்டப்பூர்வ நிரந்தர வசிப்பாளர்கள், அதாவது க்ரீன் கார்டு வைத்திருப்பவர்கள், நாட்டிற்குள் நுழைய அமெரிக்க அரசு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அதற்கு முன்னதாக, அமெரிக்க குடிமக்கள், நாட்டினர் மற்றும் க்ரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு எபோலா தடையில் இருந்து 30 நாட்கள் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், எபோலா வைரஸ் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடுப்பதற்காக, க்ரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் இந்த தடையை நீட்டிப்பது அவசியம் என்று அமெரிக்க நோய் கட்டப்பாட்டு மையமான CDC தெரிவித்துள்ளது.
பொது சுகாதாரத்தை பாதுகாப்பதற்கும், அவசரகால பதிலளிப்பு வளங்களை நிர்வகிப்பதற்கும் இடையே ஒரு சமநிலையை இந்த நடவடிக்கை ஏற்படுத்தும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கூறியுள்ளன.
அமெரிக்க பொது சுகாதாரச் சட்டத்தின் பிரிவு 42-ன் கீழ், தொற்று நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்காக மே 18-ம் தேதி அன்று, புலம்பெயர்ந்தோர் நாட்டிற்குள் நுழைவதை தடைசெய்ய, கூட்டாட்சி சுகாதார அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கும் இந்த உத்தரவை CDC முதன்முதலில் பிறப்பித்தது.
முன்னதாக, நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திற்கு, 100-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில், காங்கோ நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவரும் இருந்ததால், எபோலா அச்சம் காரணமாக, ஏர் பிரான்ஸ் விமானம் கனடாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
காங்கோவைச் சேர்ந்தவர்கள், அமெரிக்க குடியுரிமை பெற்ற காங்கோ நாட்டினர், வாஷிங்டன் விமான நிலையம் வழியாகவே அமெரிக்காவிற்குள் நுழைய முடியும் என் விதி உள்ளதால், ஏர் பிரான்ஸ் விமானம் மிச்சிகன் மாகாணத்தில் தரையிறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனாலேயே, அந்த விமானம் கனடாவிற்கு திருப்பி விடப்பட்டு, அங்கு தரையிறங்கியபின், காங்கோ நாட்டின் பயணிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற பயணிகள் அதே விமானத்தில் மிச்சிகனுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், எபோலா பரவலை, ‘சர்வதேச கவலையளிக்கும் பொது சுகாதார அவசர நிலையாக‘ (PHEIC), உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்துள்ளது. அதோடு, அரிதான புண்டிபுகேயோ வகை எபோலா, ஒரு தேசிய நோய்ப் பரவலாக மாறுவதற்கான அபாயத்தை நெருங்குவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.