அமெரிக்கா - ஈரான் இடையே ஒரு அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசிம் முனீர் ஈரான் சென்றுள்ளார். அங்கு பல்வேறு ஈரானிய தலைவர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில், அமெரிக்கா மீண்டும் முட்டாள்தனமான காரியத்தை செய்தால், அவர்கள் பேரழிவை சந்திக்க நேரிடும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அவர்கள் கூறியது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல்கள் மற்றும் பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், நேற்று ஈரானின் தலைநகரான டெஹ்ரானுக்கு பயணம் மேற்கொண்டார். இந்த டெஹ்ரான் பயணத்தின் போது, ஆசிம் முனீர், ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகரும், உயர்மட்ட பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃபை சந்தித்து, அமெரிக்கா உடனான தற்போதைய மோதலை முடிவுக்கு கொண்டுவருவது மற்றும் சாத்தியமான அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பான வழிகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, ஈரான் தனது நாட்டின் மற்றும் குடிமக்களின் உரிமைகள் மற்றும் நலன்களில் சமரசம் செய்துகொள்ளாது என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஈரானின் அரசு செய்தி நிறுவனத்தின் அறிக்கை ஒன்றின்படி, அமெரிக்கா உடனான போர் நிறுத்தத்தின் போது, ஈரானின் ஆயுதப் படைகள் தங்களது திறன்களை வலுப்படுத்தியுள்ளதாக காலிபாஃப் கூறினார். அமெரிக்கா மீண்டும் ஒரு முட்டாள்தனமான போரைத் தொடங்கினால், அதன் விளைவுகள் இன்னும் பேரழிவாகவும், மோசமாகவும் இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இன்று, அதாவது மே 23-ம் தேதி அன்று ஈரான் அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரை சந்திப்பதற்கு முன்பு, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், மேற்கு ஆசிய மோதல் மற்றும் பிராந்திய நிலைமை தொடர்பான ராஜதந்திர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சியுடன் விரிவான கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.
ஆசிம் முனீர் மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோருக்கு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து, ஈரானிய அரசு, சமூக ஊடகங்களில் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டதாக ஈரானிய அரசு செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், மேலும் பதற்றங்கள் ஏற்படுவதை தடுப்பதையும் நோக்கமாகக் கொண்ட ராஜதந்திர முயற்சிகள் குறித்து விவாதிப்பதற்காக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் டெஹ்ரானில் அரக்சியை சந்தித்தார் என்று ஈரானிய அரசு கூறியுள்ளது.
சுமார் ஒன்றரை மாத காலத்தில், இரண்டாவது முறையாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் டெஹ்ரான் வந்தடைந்ததாகவும், அங்கு இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நள்ளிரவு வரை நீடித்ததாகவும் ஐஆர்என்ஏ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சூழலில், ட்ரம்ப் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தற்போது ஈரானும் மிரட்டல் விடுக்கும் விதமாக பேசியுள்ளது. இதனால், பாகிஸ்தானின் முயற்சிகள் இந்த முறையாவது பலிக்குமா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.